கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ரேணுகாசாமி இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ரேணுகாசாமியை கொலை செய்த பின்னர் யார் யாரிடம் தர்ஷன் செல்போனில் பேசினார் என்பது குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனை சிக்கவைக்காமல் இருப்பதற்காக 3 பேர் முதலில் சரணடைந்தனர். இதற்காக அந்த 3 பேருக்கும் 30 லட்சம் கொடுத்திருக்கிறார் தர்ஷன். இது தொடர்பாக தர்ஷனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ததில் 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு வழக்கில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சிக்கினால் அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 70 லட்சம் ரூபாய் சிக்கி இருப்பதால் வருமான வரித்துறைக்கும் போலீசார் அது குறித்து கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
இதற்கிடையில் 12 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து பெங்களூரு நீதிமன்றத்தில் தர்ஷன் உட்பட 4 பேர் ஆஜராகினர். விசாரணைக்கு பின்னர் ஜூலை 4ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தர்ஷன் உட்பட 4 பேரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ரேணுகாசாமி கொடூரக்கொலையும் வழக்கின் முழு விபரமும் :
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் தர்ஷன் (47). இவரது மனைவி விஜயலட்சுமி. தர்ஷனின் தோழியும் நடிகையுமானவர் பவித்ரா கவுடா (34). சமூகத்தில் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமிக்கு கிடைக்கும் அந்தஸ்து, தர்ஷனின் தோழியான தனக்கும் கிடைக்க வேண்டும் என்று அடம்பிடித்து விஜயலட்சுமி அணிந்திருக்கும் நகைகள், ஆடைகள் மற்றும் அவர் உபயோகப்படுத்தும் கார் ஆகியவற்றை தர்ஷனிடம் வாங்கி இருக்கிறார் பவித்ரா.
இதனால் தர்ஷன் குடும்பத்தில் சில பிரச்சனைகள் நடந்து மனைவி விஜயலட்சுமியை பிரிந்து பவித்ராவுடன் இருந்திருக்கிறார் தர்ஷன். இதில் ஆத்திரமான தர்ஷனின் ரசிகர் ரேணுகா சாமி எனும் ஆட்டோ ஓட்டுநர், பவித்ராவால் தானே விஜயலட்சுமிக்கு இந்த நிலைமை என்று நினைத்து, பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமாக தகவல் அனுப்பி இருக்கிறார் சித்ரதுர்காவை சேர்ந்த 33 வயது ரேணுகா சாமி.
இதையடுத்து கடந்த 8ம் தேதிஅன்று ரேணுகா சாமி மாயமாகி இருக்கிறார். அவர் தேடப்பட்டு வந்த நிலையில், பெங்களூருவில் காமாட்சிபாளையா பகுதி கால்வாயில் மிதக்கும் ஒரு வாலிபர் உடலை நாய்கள் கவ்வி இழுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, போலீசார் அந்த உடலை எடுத்து விசாரணை நடத்தியதில் அவர் தேடப்பட்டு வந்த ரேணுகா சாமி என்பது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இந்த கொலையில் நடிகர் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து, பெரும் பரபரப்பு ஆனது.
பவித்ரா தன்னிடம் ஆத்திரப்பட்டதால், அவரை திருப்திப்படுத்த ரேணுகா சாமியை கடத்தி பெங்களூரு ஆர்.ஆர்.நகர் அருகே பட்டனகரேவில் கார் ஷெட்டில் அடைத்துவைத்து சித்திரவதை செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
பிரேத பரிசோதனையில் உடலில் 15 இடங்களில் படுகாயங்கள் இருந்ததும், தலையை வாகனத்தில் பலமாக மோதியதும், உடலில் மின்சாரம் பாய்ச்சியதும் தெரியவந்தது. காது அறுக்கப்பட்டுள்ளது. மரக்கட்டை மற்றும் பெல்ட்டால் மிகக்கடுமயாக தாக்கப்பட்டுள்ளார். கடுமையாக உதைத்ததில் விதைப்பை சேதப்படுத்தப்பட்டு, விந்தணு சிதைந்துள்ளது. கை, கால்கள், முதுகு, மார்பில் ரத்தக்காயங்கள் உள்ளன என்று பிரேத பரிசோதனை முடிவுகள் அதிரவைத்தன. கால்வாயில் தூக்கி வீசப்பட்டு நாய்கள் கடித்ததில் முகத்தில் சில பகுதியும் சிதைந்தன. இத்தனை கொடுமைகளை செய்து ரேணுகா சாமியின் உடலையும் அவரது செல்போனையும் கால்வாயில் வீசி உள்ளனர்.
ரேணுகாசாமியை தாக்கி அவரது உடலில் எலெக்ட்ரிக் டாட்ச் லைட் கொண்டு மின்சாரம் பாய்ச்சியதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ரேணுகா சாமியை அடைத்து வைத்த இடத்திற்கு பவித்ரா சென்றிருக்கிறார். பவித்ரா கவுடாவை பார்த்ததும் அவரது காலில் விழுந்து ரேணுகா சாமி மன்னிப்பு கேட்டதாகவும், அப்போது அவரை செருப்பால் அடித்து தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது ரசிகரை கொடூரமாக கொலை செய்துவிட்டு ஓட்டலில் குடித்துவிட்டு சக நடிகர் சிக்கண்ணாவுடன் கொண்டாடி இருக்கிறார் தர்ஷன்.
இந்த கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா உள்பட 14 பேரை அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த இடம், கால்வாயில் உடல் வீசப்பட்ட இடம் , கொலை செய்த பின்னர் மைசூரில் தர்ஷன் தங்கியிருந்த ஓட்டல், சித்ர துர்காவில் இருந்து ரேணுகாசாமியை கடத்தி வந்த இடம் உள்பட 12 இடங்களுக்கு கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச்சென்று வாக்குமூலம் பெற்ற போலீசார், 118 சாட்சியங்கள் சேகரித்தனர்.
தர்ஷனை கைது செய்வதற்கு முன்னர் ரேணுகா சாமியை கொடூரக்கொலை செய்த வீடியோவை போலீசார் கர்நாடக முதல்வரிடம் காட்டி இருக்கிறார்கள். அதைப்பார்த்துவிட்டு அதிர்ந்து போன முதல்வர், ‘’இவர்கள் எல்லாம் மனிதர்களா? மிருகமா?’’ என்று ஆவேசப்பட்டுள்ளார். நிறைய அழுத்தம் இருந்தும், தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று முதல்வர் அழுத்தமாக சொன்னதன் பின்னரே போலீசார் உடனடியாக தர்ஷனை கைது செய்துள்ளனர்.
தர்ஷனை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் என்று ரேணுகா சாமியின் தந்தை கண்ணீர் வடிக்கிறார். ரேணுகா சாமியின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் உதவிகள் கேட்டு அவரது குடும்பத்தினர் கர்நாடக அரசை நாடியிருக்கிறது.