
தென்னிந்திய சினிமாவில் எண்பதுகளில் முன்னணியில் இருந்த நடன இயக்குநர் புலியூர் சரோஜா. அவரின் கணவர் ஜி.சீனிவாசன். நடிகர், கதையாசிரியர், இயக்குநர் என்று பன்முகம் கொண்ட சீனிவாசன், நீதிபதி பக்தவச்சலத்தின் உறவினர். தஞ்சாவூர் மாவட்டம்தான் பூர்வீகம்.

தஞ்சாவூரில் பள்ளிப்படிப்பை முடித்த சீனிவாசன் கலை மீது இருந்த ஆர்வத்தில் சென்னை வந்து நாடகக்கம்பெனிகளில் பணியாற்றினார். வரலாறு மற்றும் சமூக நாடகங்களுக்கு கதை எழுதி இயக்கும் பணியிலும் இருந்தவர், திரையுலகில் நுழைந்து பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் உள்ளிட்டோரிடம் துணை இயக்குநராக பணியாற்றினார். சீனிவாசன் 8 படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார். 3 படங்களை இயக்கி இருக்கிறார்.

1975இல் ‘அவள் ஒரு காவியம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். புதிய வார்ப்புகள், கிழக்கே போகும் ரயில், ஏணிப்படிகள், பூட்டாத பூட்டுகள், கன்னி பருவத்திலே, ராணுவ வீரன், சட்டம் ஒரு இருட்டறை, கடல் மீன்கள், இதயக்கோயில், முரட்டுக்காளை, ராஜாதி ராஜா, வாழ்வே மாயம், மனிதன், உரிமை கீதம், கிளிஞ்சல்கள், பெண்மணி அவள் கண்மணி, என்னெப் பெத்த ராசா, காவல் கீதம், ஐயா, வேங்கை, நகரம் என்று 200 படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
’மனிதன்’ படத்தில் தியாகி சின்னையா கேரக்டரில் மாற்றுத்திறனாளியாக நடித்து அசத்தி இருப்பார்.
சீனிவாசன் – புலியூர் சரோஜா தம்பதியின் ஒரே மகன் சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். அதன் பின்னர் சென்னை ராமாவரம் பகுதியில் ‘சத்யா மெட்ரிகுலேஷன்’ தொடங்கி நடத்தி வந்தனர்.

95வயதான சீனிவாசன் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மறைந்தார். சென்னை அசோக்நகர் இந்திரா காலணியில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலையில் ஏ.வி.எம். சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.