சென்னை முகப்பேரில் நடந்த திமுக பவளவிழா முப்பெரும் விழா கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சத்யராஜ் பேசும்போது, ‘’நாத்திகராக இருக்கும் நானும் பெரியாரிஸ்ட். ஆத்திகராக இருக்கும் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பெரியாரிஸ்ட். நான் பெரியாரிஸ்ட்டாக இருப்பதில் மதவாதிகளுக்கு பிரச்சனை இல்லை. ஆனால், சேகர்பாபு பெரியாரிஸ்ட்டால்தான் மதவாதிகளுக்கு பிரச்சனை.
குங்குமம் வைப்பது, விபூதி பூசுவது பற்றி எங்களுக்குக்தேவையில்லை. எங்களுக்குத் தேவை பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கடவுள் இருக்கு என்று நம்பும் ஆத்திகர்களும் பெரியார் வழியில் நடப்போம். கடவுள் இல்லை என்று நம்பும் நாத்திகர்களும் பெரியார் வழியில் நடப்போம். இது சமூக விடுதலை மண். இது பகுத்தறிவு மண். இது பெண் விடுதலை மண் . இது பெரியாரின் மண்’’ என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் தனது பேச்சில், ‘’ ஒரு தாழ்த்தப்பட்டவர் தன்னை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்று நாத்திகரிடம் சென்று புகார் சொன்னால், கோவிலுக்குள் தான் கடவுள் இல்லையே. அங்கு போய் என்ன செய்யப்போகிறாய் என்று சொல்லிவிடுவார்.
என்னிடமோ, ஆசிரியர் வீரமணி அய்யாவிடமோ சென்று இதைச்சொன்னால், கடவுள் இல்லை என்று நம்புகிறவர்கள்தான் நாங்கள். ஆனாலும், கோவிலுக்குள் செல்ல உனக்கு உரிமை இருக்கிறது. இதை தடுப்பது தவறு என்று குரல் கொடுப்போம். இதுவே, கடவுளை நம்பினாலும் பெரியார்வாதியாக இருக்கும் அமைச்சர் சேகர்பாபுவிடம் சென்று சொன்னால், உன்னை யார் தடுத்தது என்று சொல்லி, உடனே கோவிலுக்குள் அழைத்துச்செல்வார். அதனால்தான் சொல்கிறேன் சேகர்பாபு பெரியாரிஸ்ட்டால்தான் மதவாதிகளுக்கு பிரச்சனை’’ என்று குறிப்பிட்டார்.