சினிமாவில் இருந்து விலகி தவெக தலைவர் ஆகியிருக்கும் விஜய்க்கு குட்டு வைத்திருக்கிறார் பிரபல நடிகர் சிவராஜ்குமார்.
இந்த மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சினிமாவில் உச்சத்தை விட்டுவிட்டு, பல கோடி ரூபா வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாடு முதல் இப்போது நடக்கும் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் வரையிலும் சொல்லி வருகிறார் விஜய்.
தற்போது தவெகவில் இணைந்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், ‘’ஆண்டுக்கு 500 கோடி வருமானம் இருந்தும், மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய்’’ என்று போகுற இடமெல்லாம் சொல்லி வருகிறார்.

இதையெல்லாம் மனதில் கொண்டுதான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில மாதங்களுக்கு முன்பாக, ‘’உச்சத்தை விட்டு, வருமானத்தை விட்டு வந்தேன் என்று சொல்கிறான். வா’ன்னு உன் வீட்டு வாசல்ல எவண்டா நின்னான். வாட்ச்மேன் கூட நிக்கலயேடா. ஏண்டா இப்டி பேசிட்டு அலையுற? சேவை செய்ய வந்தா சேவை செய். நான் அடைகலத்திற்காக வரவில்லை. படைக்கலத்தோட வந்திருக்குறேன்னு சொல்லுற.. யாரும் வா’ன்னு உன்ன கூப்பிடலையே. எதுக்கு வர்ற? என்னுடைய அன்புச்சகோதரர் அஜித்குமாரும், ஐயா ரஜினிகாந்தும் தங்களுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லைடா. எம்.ஜி.ஆர். நடிகர்னு நினைக்காத..ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எழுதி வைக்காம படிப்பாருடா..’’ என்று மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார்.

தற்போது கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரிடம் ‘’தமிழ்நாட்டில் நடிகர்கள் எல்லோரும் அரசியலுக்கு வருகிறார்கள். கர்நாடகாவில் ராஜ்குமார், உபேந்திரா, நீங்கள் உள்ளிட்ட யாரும் ஏன் அரசியலுக்கு வருவதில்லை?’’ என்ற கேள்விக்கு,
‘’மக்களுக்கு நல்லது செய்யணும்னா அரசியலுக்கு வந்துதான் செய்யணும்னு இல்ல. நடிகரா இருந்துகூட பண்ணலாம். அதுக்கு அதிகாரம்லாம் தேவையில்ல. நடிகரா இருந்து மக்களுக்குக் நல்லது செய்யலாமே, ஏன் அரசியலுக்கு வரணும். சொந்தப்பணம் என்கிறபோது பாரபட்சம் பார்க்காமல் யாருக்கும் உதவலாம். என் சொந்தப்பணத்தில் உதவிகள் செய்கிறேன். இதற்கு எனக்கு அதிகாரம் எல்லாம் தேவையில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
இது விஜய்க்கு சிவராஜ்குமார் வைத்த குட்டு என்றே வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
