கௌதம் அதானி மற்றும் அவரது 2 உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர், இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,110 கோடி லஞ்சம் கொடுத்து, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் கிடைக்கும் ஒப்பந்தங்களைப் பெற்றதாக அமெரிக்க குற்றவியல் துறை குற்றம் சாட்டியுள்ளது.
நியூயோர்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இது தொடர்பான 5 வழக்குகளிலும் முக்கிய குற்றவாளிகளாக கௌதம் அதானி, சாகர் அதானி, வினித் ஜெயின் ஆகிய மூவர்தான்.
இந்த மூவரும் இணைந்து செக்யூரிட்டீஸ் மற்றும் வயர் பிராட் குற்றங்களைச் செய்து, பொய்யான மற்றும் தவறான விபரங்களைக் கொடுத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் முதலீட்டைத் திரட்டியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் மோசடிக்கு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு புதுப்பிக்கத்தக்க எனர்ஜி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால் மற்றும் கனடாவின் நிறுவன முதலீட்டாளர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சிரில் கபேன்ஸ், சவுரப் அகர்வால் மற்றும் தீபக் மல்ஹோத்ரா ஆகியோரும் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.
அமெரிக்க சந்தையில் இருந்து முதலீடு பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்குப் பெரிய அளவிலான திட்ட ஒப்பந்தத்தை உருவாக்கி, அதற்கு பொய்யான தகவல்களையும், ஆவணங்களையும் உருவாக்கி மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 இடையேயான காலகட்டத்தில், ஒடிஸா, தமிழ்நாடு, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதானி குழுமம் எந்த மாநில அரசுகளிடமும் நேரடியாக எந்த கொள்முதல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை.
மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன்(SECI) மட்டுமே இந்த ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றுள்ளது.
அனைத்து பரிவர்த்தனைகளும் அனைத்து மாநிலங்களாலும் SECI நிறுவனம் மூலமே செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது தொடர்பான அமெரிக்க அரசின் விசாரணையை தடுத்து ஊழல் சதித்திட்டத்தை மறைக்க இவர்கள் முயன்றனர் என்றும் FBI-யின் உதவி இயக்குநர் டென்னி கூறியுள்ளார்.
இந்த குற்றச்செயல்கள் 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் நடந்துள்ளதாகவும், இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மின் திட்டத்தை உருவாக்கும் மாபெரும் ஒப்பந்தத்தை இந்திய அரசிடம் இருந்து பெறவே கௌதம் அதானி இதை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்தே அமெரிக்க முதலீட்டாளர்களிடம் அதானி குழுமம் முதலீடுகளை திரட்டியுள்ளது என அமெரிக்க நிதி துறை அறிக்கையில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படி லஞ்சம் கொடுத்து இந்திய அரசிடம் பெற்ற சோலார் எனர்ஜி சப்ளை கான்டிராக்ட் அடிப்படையாக வைத்து, அமெரிக்க கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஏமாற்றி 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைக் கடன் மற்றும் பத்திரங்கள் விற்பனை மூலம் திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் என அதானி கிரீன் எனர்ஜி விளக்கமளித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள இந்திய தூதகம் இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.