சிமெண்ட் சந்தையில் அல்ட்ராடெக் – அதானி குழும நிறுவனங்கள் அம்புஜா, ஏசிசி ஆகியவற்றிற்கு இடையே கடுமையானப் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் அதிக விலை கொடுத்து இந்தியா சிமெண்ட்சை அல்ட்ராடெக் கைப்பற்றியதன் மூலம் சி.எஸ்.கேவின் ஐபிஎல் உரிமையில் பாதிப்பு எதுவும் இருக்காது என்று இந்தியா சிமெண்ட்ஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் ஆதித்யா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக். இந்த நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சீனிவாசன் குடும்பத்திற்குச் சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ்சை கைப்பற்றி உள்ளது. சிமெண்ட் தயாரிப்பில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் அதானியின் நிறுவனம், ஐதராபாத்தைச் சேர்ந்த பென்னா சிமெண்ட் நிறுவனத்தை கைப்பற்றி இருக்கும் நிலையில், அல்ட்ரா டெக் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றி இருக்கிறது.
ஆண்டிற்கு 154.86 மில்லியன் டன் உற்பத்தித் திறன் உள்ள அல்ட்ராடெக் நிறுவனம், 200 டன் உற்பத்தித்திறனான மாற்ற முயன்று வந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.77 சதவிகிதப்பங்குகளை வாங்கியது. ஒரு பங்கிற்கு 268 ரூபாய் என்ற விலையில் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை வாங்கி இருக்கிறது அல்ட்ராடெக்.
இதையடுத்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் இருந்து 32.72 சதவிகித பங்குகளை 3,954 கோடி ரூபாயில் வாங்க அல்ட்ராடெக் நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலமாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55%க்கும் அதிகமான பங்குகளை கைப்பற்றுகிறது அல்ட்ராடெக்.
இந்த ஒப்பந்தத்தினால் இந்தியா சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் நிறுவனத்தின் துணை நிறுவனமாக மாறுகிறது. இந்தியா சிமெண்ட்ஸில் அல்ட்ரா டெக்கின் பங்குகள் 55.49% உயர்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சிஎஸ்கே. இதன் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸின் உரிமையாளர் என்.சீனிவாசன். இந்தியா சிமெண்ட்ஸின் பங்குகள் விற்கப்பட்டுள்ளதால் சிஎஸ்கே உரிமையை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார் சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன். கடந்த 2015ம் ஆண்டிலேயே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து சிஎஸ்கே பங்குகள் பிரிக்கப்பட்டுவிட்டது. சிஎஸ்கேவும், இந்தியா சிமெண்ட்ஸ்சும் வெவ்வேறு நிறுவனங்கள். இதனால் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளின் விற்பனையால் சிஎஸ்கேவின் உரிமை பாதிக்காது என்கிறார்.
அல்ட்ரா டெக் மூலம் இந்தியா சிமெண்ட்ஸின் பங்குகள் வரலாறு காணாத வகையில் உச்சத்திற்கு சென்றுள்ளது. ஜூன் மாத துவக்கத்தில் ரூ.184 என்று இருந்த இந்தியா சிமெஸ்ண்ட்ஸ் பங்குகளின் விலை ரூ.372 ஆக உயர்ந்தது. தற்போது 2வது பங்கு விற்பனை ஒப்பந்த கைப்பற்றல் மூலமாக ரூ.500 வரைக்கும் உயர வாய்ப்புகல் உள்ளன என்று கூறப்படுகிறது.