
ADMK BJP Alliance Edapadi palaniswami meets Amit Shah in Delhi
சட்டமன்றத்தில் அதிக நாட்கள் நடக்கக்கூடிய கூட்டத் தொடர் என்பது பட்ஜெட் கூட்டத் தொடர்தான். பட்ஜெட் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறைவாரியான மானியக் கோரிக்கைகள் நடைபெறும். அவரவர் தொகுதிகளின் தேவைகள் குறித்த கேள்வி-பதில்கள் இருக்கும். கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வரப்படும். இத்தகைய முக்கியமான கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளே ஜனநாயகத்தின் வலிமையைக் காட்டக்கூடியதாக அமையும். தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மார்ச் 25 அன்று எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு வரவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்றிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. எவ்வித அறிவிப்புமின்றி, அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றதன் காரணம் என்ன என்பது கட்சிக்காரர்களுக்குக்கூடத் தெரியவில்லை. தமிழ்நாட்டு ஊடகங்களில் டெல்லி செய்தியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எதற்காக வந்தார், எங்கே இருக்கிறார் என்று தேடத் தொடங்கினர். டெல்லியில் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் கேள்வி கேட்டபோது, “இங்குள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட வந்தேன்” என்றார். ஒரு மாநிலக் கட்சிக்கு இந்தியத் தலைநகரில் அலுவலகம் என்றால் அது அந்தக் கட்சியினருக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தி.மு.க. தன்னுடைய டெல்லி அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தின் திறப்பு விழாவை கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து சிறப்பாக நடத்தியது. மற்ற மாநிலக் கட்சிகளும் டெல்லியில் தங்களுக்கான அலுவலகங்களின் முகவரியை பொதுவெளியில் தெரிவித்துள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளரோ இரவு நேரத்தில் ரகசியமாக போய்விட்டு திரும்புகிற இடம்போல டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்திற்குப் பயணித்தது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அலுவலகத்தைப் பார்வையிடுவதற்காக சட்டமன்றக் கூட்டத் தொடரைப் புறக்கணித்துவிட்டு வரவேண்டிய அவசியமென்ன என்ற கேள்வியின் பின்னணியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பினால்தான் எடப்பாடி பழனிசாமி அவசரமாக டெல்லிக்குப் பறந்தார் என்ற பதில் கிடைத்தது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிற நிலையில், டாஸ்மாக் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அதனைத் தொடர்ந்து, 1000 கோடி ரூபாய் ஊழல் என்று தி.மு.க. அரசு மீது பா.ஜ.க. குற்றம் சாட்டியது. உண்மையில், இந்த விவகாரம் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளில் பெரும்பாலானவை அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டவை. அப்போது நடந்த முறைகேடுகள் தொடர்பானவை. அத்துடன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடுகளிலும் ரெய்டுகள் நடந்தன. இந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி அவசரமாக டெல்லி சென்றார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால் அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர்களான தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருடன் மார்ச் 25 அன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும், ஊழலையும் மதுவிற்பனையையும் முடிவுக்கு கொண்டு வரும் என்றும் அமித்ஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கானதுதான் என்பது உறுதியாகிவிட்டது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்தனி அணிகளாக நின்றபோது, 7 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் பறிபோனது. பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு வந்தது. தி.மு.க. அணி வலிமையாக இருப்பதால், அதனை உடைப்பதும், தி.மு.க.வுக்கு எதிராக பலமானக் கூட்டணியை அமைப்பதும்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான போட்டியை உருவாக்கும் என்பது அரசியல் களக் கணக்கு. அதனால்தான், அமித்ஷா கூப்பிட்டவுடன் டெல்லிக்குப் பறந்துபோய் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அமித்ஷா கூப்பிட்ட குரலுக்கு ஓடுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள். சசிகலாவும் காத்திருக்கிறார். இவர்கள் எல்லாரையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் ஒன்றாக்கி, மொத்த அ.தி.மு.க.வையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு. தமிழ்நாட்டில் பா.ஜ.க. அடித்தளம் அமைக்கவேண்டுமென்றால், இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றின் வலிமையையாவது குறைத்தாக வேண்டும். தி.மு.க. பக்கம் அது நடக்காது என்பதால், அ.தி.மு.க.வை தன் விருப்பத்திற்கு பயன்படுத்த பா.ஜ.க. தலைமை முடிவெடுத்து செயல்படுகிறது. அ.தி.மு.க.வும் எஜமானரின் குரல் கேட்டதும் ஓடோடிச் செல்கிறது.
பா.ஜ.க.வை நம்பிச் சென்ற கூட்டணிக் கட்சிகள் தங்கள் அடையாளத்தை இழந்ததுதான் அரசியல் வரலாறு. 50 ஆண்டுகால அரசியல் கட்சியான அ.தி.மு.க. இப்போது பா.ஜ.க.விடம் சரண்டராகியுள்ளது.
g1kwwv