யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கையகப்படுத்தப்படுவதால் யானை -மனித மோதல் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் யானைகள், மனிதர்கள் உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன. இவ்வாறு யானைகளின் இயற்கையான வழித்தடங்களை கையகப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து வனத்துறையுடன் இணைந்து தமிழ்நாடு அரசு மீட்டுள்ளது. இதை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது அதிமுக!
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே பென்னாகரம் வனப்பகுதியில் பேவனூர், சிங்காபுரம், மணல் திட்டு பகுதிகளில் இருந்த யானை வலசைப்பாதை ஆக்கிரமிப்பினை கடந்த 10.5.2024ல் வனத்துறையினர் அகற்றினர்.
பேவனூர் காப்புக்காடு பகுதியில் உள்ள வேப்பமரத்து கொம்பு கிராமத்தில் இருந்த பூர்வகுடி மக்களை பென்னாகரம் வனத்துறையினர் வெளியேற்றினர். அக்கிராமத்தில் இருந்த 20 வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றினர். மூன்று முறை முறையாக நோட்டீஸ் அனுப்பியும் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததால் வேறு வழியின்றி, உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆக்கிமிப்பை அகற்றியுள்ளனர் வனத்துறையினர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியேற மறுத்ததால் அவர்களை போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தியது வனத்துறை. அந்த சமயம் அவர்கள் அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தது வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பார்பதற்கு ஏதோ அடக்குமுறை செயல் என்பது போன்று தெரிந்ததால், அது குறித்து எதுவும் விசாரிக்காமல், ’’தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட வனத்துறை மற்றும் காவல்துறையின் செயலுக்கு எனது கடும் கண்டனம்’’ என்று தெரிவித்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி..
அவர் மேலும், மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதும், பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டார் எதிர்க்கட்சி தலைவர் என்று இதனால் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வனப்பகுதியில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தவற்றை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, கூடுதல் தலைமைச்செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், தமிழ்நாடு வனச்சட்டத்தின் படி, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின் படியே அகற்றினர். ஆக்கிரமிப்பை அகற்றும்போது சில நாடகமாடினர். அதுதான் சர்ச்சையாகிவிட்டது என்று தர்மபுரி மாவட்ட வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க இதை உணராது, செயல்பட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளன.