கட்சியில் தனக்கு அதிருப்தி இல்லை என்பதை நிரூபிக்க மாவட்டந்தோறு கள ஆய்வுக்கூட்டங்களை நடத்த உத்தரவிட்டிருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதன்படி திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் தலைமையில் மாவட்டந்தோறும் அதிமுக கள ஆய்வுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன.
அடிதடி, தள்ளுமுள்ளு, வாக்குவாதம் நடைபெறாத கள ஆய்வுக்கூட்டம் இருந்தால் பரிசு என்று அறிவிக்கும் அளவுக்கு கள ஆய்வுகளில் களேபரம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
நெல்லையில் வேலுமணி தலைமையில் நடந்த கள ஆய்வுக்கூட்டத்தில் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால், ‘’அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரும் சண்டை போடக்கூடாது. பிரச்சனையை தலைமைக்கு சொன்னால் நடவடிக்கை எடுப்போம் ’’ என்று வேலுமணி சமாதானப்படுத்தினார்.
கும்பகோணத்தில் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்த கள ஆய்வுக்கூட்டத்தில் கட்சியினர் கடும் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டதால் கடுப்பான தங்கமணி, ‘’அதிமுக நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை’’ என்று புலம்பித்தள்ளினார்.
கும்பகோணத்திலும் நெல்லையிலும் நடந்த சம்பவத்திற்கு திருச்சி கள ஆய்வுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தனர் தங்கமணியும் திண்டுக்கல் சீனிவாசனும். நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்ததால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்போதும் அது தொடர்ந்தால் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியதுதான் கடுப்பாகச்சொன்னார். திண்டுக்கல் சீனிவாசனும், மேடையில் நாங்கள் ஒரு கூட்டம் போட்டா கீழே நீங்க ஒரு கூட்டம் போடுறீங்க என்று கடுப்பானார்.
வரப்போகும் தேர்தல் கவனத்தில் கொள்ளாமல் இவர்கள் எல்லாம் இப்படி அடித்துக்கொள்கிறார்களே என்று அதிமுகவுக்கு இது வாழ்வா சாவா தேர்தல் என்று அரியலூர் கள ஆய்வின் போது மறைமுகமாக சாடினார் கே.பி.முனுசாமி.
இத்தனை அறிவுறுத்தியும் இதோ இன்றைக்கு மதுரையில் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு முன்னிலையில் நடந்த கள ஆய்வுகூட்டத்திலும் அடிதடியில் இறங்கி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் அதிமுகவினர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செழியனை கட்சியில் சேர்க்கச்சொல்லி வாக்குவாதம் வந்தபோது செழியனை கீழே தள்ளி தாக்குல் நடத்தப்பட்டது. டாக்டர் சரவணன் ஆதரவாளர்தான் செழியன் என்று கூறப்படுகிறது. நத்தம் விஸ்வநாதனும் செல்லூர்ராஜுவும் தங்கள் முன்னிலையிலேயே நடந்த இந்த களேபரத்தைக் கண்டு விழிபிதுங்கி நின்றனர்.