அந்தப் பதிவுக்கும் கூட்டணிக்கும் சம்மந்தமில்லை என்று அந்தர் பல்டி அடித்துவிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அன்புமணி ராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி பாஜகவின் தேஜ கூட்டணியில் இணைந்தது. அந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும் பாமகவும் படு தோல்வி அடைந்தன. இதன் பின்னர் பாமகவை கண்டுகொள்ளவே இல்லை பாஜக.
இதனால் வரும் தேர்தலில் பாமக அணி மாறுகிறது என்ற தகவல் பரவி வந்த நிலையில், புதுக்கட்சி தொடங்கி தமிழக அரசியலில் விஜய் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார் ராமதாஸ்.
உடனே ராமதாஸ் பாஜகவில் இருந்து வெளியேறுகிறார். தவெகவில் இணைகிறார். அதனால்தான் பழையன பாஜக கழிதல், புதிய தவெக புகுதல் என்கிற அர்த்தத்தில் சொல்கிறார் என்று செய்திகள் பரவின.
சில தினங்களூக்கு பின்னர், அந்த பதிவு குறித்தும் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் மனம் திறந்துள்ளார் ராமதாஸ்.
தவெக பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லையா? கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடாது என்று பாஜக அழுத்த கொடுக்கிறதோ என்னவோ? திடீரென்று அந்தர் பல்டி அடித்துவிட்டார் ராமதாஸ்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே’’என்கிற அந்த பதிவுக்கும் அரசியலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே’’என்கிற நன்னூல் சூத்திரம் முழுமையாக யாருக்கும் புரியாததால் அதை முழுமையாக பதிவிட்டேன்” என்கிறார்.
அவர் மேலும், ‘’பாஜகவில் இருந்து பாமக விலகவில்லை. இது அரசியலுக்கும் சம்பந்தமில்லை. பொதுக்குழு கூடித்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம்’’ என்கிறார்.
இந்த எண்ணத்தில்தான் உண்மையிலேயே அவர் அந்த பதிவை போட்டார் என்றால் அந்த பதிவால் சலசலப்புகள் எழுந்த போதே அதற்கு விளக்கம் கொடுத்திருக்கலாமே. எதற்கு விமர்சனங்களை வளரவிட்டு விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக இருக்கிறது.