
ஆடியோ வீடியோவால் அதகளம் ஆகியிருக்கிறது அதிமுக. அதிமுகவின் சீனியர் செங்கோட்டையனை ஓரங்கட்டிவிட நினைத்திருக்கிறார் எடப்பாடி. இதனால் கடுப்பான செங்கோட்டையன், கட்சியின் தான் எத்தனை பெரிய சீனியர் என்பதை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் அவர் கட்சி தாவப்போகிறார் என்று செய்திகள் பரவியதால், தான் அந்த முடிவை எடுக்கவில்லை என்பதை சொல்வதற்காக, ’’கட்சியில் கொள்கையில் உறுதியாக உள்ளவர் செங்கோட்டையன்’’ ஜெயலலிதா பேசிய ஆடியோவை நேற்று பொதுக்கூட்ட மேடையில் வெளியிட்டார் செங்கோட்டையன்.

இதையடுத்து இன்று காலையில், எடப்பாடியின் ஆதரவாளர் ஆர்.பி.உதயகுமார், ‘’ எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்’’ என்று சொல்லி வீடியோ வெளியிட்டார்.
செங்கோட்டையனுக்கு பதிலளிக்கும் விதமாகத்தான் இந்த வீடியோ உள்ளது என்று சர்ச்சை எழுந்து, அதிமுக உட்கட்சி விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் திடீரென்று செங்கோட்டையனுக்கு பதிலளிக்கும் வீடியோ அல்ல அது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இது ஒருபுமிருக்க, எடப்பாடியை ஜெயலலிதாவின் மறு உருவம் என்று சொன்னதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ் மகனும் முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத். அவர், ‘’முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே…
நேற்று – மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்…
இன்று – மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி பழனிச்சாமி…
நாளை யாரோ…? என்ன விளையாட்டு இது…?’’ என்று கேட்டிருக்கிறார்.
அதிமுகவில் உட்கட்சி விவகாரத்தில் உதயகுமார் விளையாடிக் கொண்டிருப்பதாக ‘விளையாட்டுத்துறை’ என்பதை பெரிதுபடுத்திக் காட்டி இருக்கிறார் ரவீந்திரநாத்.
இதற்கு பதிலடிகொடுப்பதற்காக உதயகுமார், ‘’ தேனி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் யார் என்று தெரியாது. கூகுளில் தேடிப்பார்த்து சொல்கிறேன்’’ என்று நக்கலடித்துள்ளார்.
Your passion shines through in your writing, and it’s contagious!