திமுக – அதிமுக என்று தமிழகத்தில் இரு பெரும் கட்சிகள் இருக்கும்போது திமுகதான் தனது அரசியல் எதிரி என்று அறிவித்து, திமுகவை கடுமையாக விமர்சித்தார் விஜய். இதனால் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்று கருத்து எழுந்தது. அதிமுகவினரும் இதுவரைக்கும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாகச் சொல்லவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது என்றே சமாளித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுகவும் தவெகவும் கூட்டாக சந்திக்க இரு கட்சிகளும் பேசி வருகின்றன. கூட்டணியில் சேர விஜய் நிபந்தனை விதித்திருபதால் அதிமுகவுக்கு 154, தவெகவுக்கு 80 தொகுதிகள் என்று பங்கீடு செய்து பேச்சுவார்த்தை நடப்பதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.
இதை மறுத்திருக்கிறது தவெக. இதுகுறித்து இன்று தவெக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மை சக்தியாக இருக்கும் நிலையில் இதை மடைமாற்றும் முயற்சியாக அடிப்படை ஆதாரமன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பாக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில், பெரும்பான்மை பலத்துடன் வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லாட்சியை அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை. முதல்வர் வேட்பாளராக விஜய் இருந்து, முதன்மை சக்தியாக தவெக இருந்து, அதன் கீழ் மற்ற கட்சிகளை சேர்த்து தேர்தலை சந்திப்பதே தவெகவின் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இருந்து பதில் இன்னும் வரவில்லை. பொன்னையன் உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் பலரும் தவெகவின் இந்த அறிக்கை குறித்த கேள்விக்கு, தவெகவுடன் கூட்டணி இல்லை என்று அடித்துச்சொல்லவில்லை. கூட்டணியை இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுச்செயலாளர் முடிவு செய்வார் என்றே சமாளித்து வருகின்றனர்.
இதனால் அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. அதே நேரம், தனது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று அறிக்கை மூலம் அதிமுகவுக்கு விஜய் நெருக்கடி கொடுக்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்தை முன் வைக்கின்றனர்.