தமிழ்நாடு சட்டப்பேரவையின் குறுகிய கால கூட்டத்தொடரில் மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனைக் கைவிட வலியுறுத்தி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. டிசம்பர் 9ஆம் நாள் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சியை நோக்கி ஆவேசத்துடன் பேசினார்.
“நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்த பிறகு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன்? தி.மு.க.வின் எம்.பி.க்கள் இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்” என்று குரலை உயர்த்தி தி.மு.க அரசு மீதும் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள் மீதும் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல, நாடாளுமனற்தில் தி.மு.க எம்.பி.க்கள் இதை செய்திருக்கலாமே? அவர்கள் என்ன செய்தார்கள்?
ஒரு திட்டத்திற்கான நிலத்தைக் கையகப்படுத்துவது என்பது பொதுவாக மாநில அரசை சார்ந்ததாக இருக்கும். உதாரணத்திற்கு, சென்னை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டிய வேலை மாநில அரசினுடையது. அதனைக் கையகப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். விமான நிலையம் மற்றும் விமான சேவை என்பது மத்திய அரசினுடையது. மாநில அரசு கையகப்படுத்தி வழங்கும் நிலங்களின் உரிமையினை உறுதி செய்து மத்திய அரசு அதனை ஏற்றுக் கொண்டு தன் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்கும். அல்லது அதானி போன்ற தனியார் நிறுவனங்களுக்குக்கூட விமான நிலைய பராமரிப்பைக் கொடுக்கும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கான நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும். சுரங்கத்தை மத்திய அரசாங்கம் நடத்தும்.
சில கனிமங்கள் குறித்து மாநில அரசே முடிவு செய்து குத்தகைக்கு விடும். மணல் குவாரிகள் தொடங்கி பலவும் இதில் அடக்கம். இதில் மாநில மக்களின் நலன், இயற்கை பாதுகாப்பு, விவசாயிகள் வாழ்வுரிமை, மக்களின் எதிர்ப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுவது பெரும்பாலான மாநிலங்களின் வழக்கம். மத்திய அரசு நினைப்பதுபோல தனியாருக்கு லாபம் தரும் வகையில் சுரங்கம் அமைக்க முடியாமல் போகிறது. அதனால்தான், மத்திய பா.ஜ.க. அரசு சில முக்கிய கனிம வளங்கள் உள்ள பகுதிகள் தொடர்பான ஒரு சட்டத் திருத்தத்தை 2003ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தத் திருத்தத்தின் மூலம், கனிம வளங்கள் உள்ள பகுதியை மத்திய அரசே ஏலம் விட முடியும். இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, மணிப்பூர் கலவரம் குறித்த விவாதத்தை வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசை வலியுறுத்தி, வெளிநடப்பு செய்தன. விவாதம் இல்லாமல் எந்தத் தீர்மானத்தையும் நடத்தக்கூடாது என வலியுறுத்தின. எனினும், அப்போது பெரும்பான்மையுடன் இருந்த பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி விவாதம் இன்றியே மக்களவையில் இதனை நிறைவேற்றிவிட்டது.
மாநிலங்களவையில் இந்த சட்டத்திருத்தம் விவாதத்திற்கு வந்தபோது தி.மு.க.வும் மற்ற எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. அ.தி.மு.க.வின் எம்.பி.யான தம்பிதுரை, இந்த சட்டத்திருத்தத்தை ஆதரிப்பதாகக் கூறி பேசினார். தமிழ்நாட்டில் விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதிலும், சுரங்கங்களை அனுமதிப்பதிலும் மாநில அரசு சரியாக செயல்படுவதில்லை என்றும், அதனால் கனிம வளங்கள் கேரளா-கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்றும், அதனால் மத்திய அரசே இத்தகைய கனிமங்களுக்கு ஏலம் விடுவதே சரியான முறை என்று சொல்லி அதனை ஆதரித்தார். அ.தி.மு.க. ஆதரவில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள த.மா.கா ஜி.கே.வாசனும் மத்திய பா.ஜ.க. அரசின் சட்டத் திருத்தத்தை ஆதரித்தார். மசோதா நிறைவேறியது.
அ.தி.மு.க ஆதரித்த மசோதாவில் கிராஃபைட், காட்மியம், இண்டியம், நிக்கல், கோபால்ட் உள்ளிட்ட அரிய வகை கனிமங்களை ஏலம் விடும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. அதில் மதுரை அரிட்டாப்பட்டியில் எடுக்கப்பட முயற்சிக்கும் டங்ஸ்டன் என்ற கனிமமும் அடக்கம். மசோதா நிறைவேறியதால்தான், மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசே ஏலம் விட முன்வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க. பொதுச்செயலாளரா தி.மு.க எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் எனக் கேட்கிறார்? தம்பிதுரை என்ன செய்தார், வாசன் என்ன செய்தார் என்பது அவருக்குத் தெரியவில்லை.
ஆதரித்து நிறைவேற்றிய தம்பிதுரையோ நான் சட்டத் திருத்தத்தைத்தான் ஆதரித்தேன், அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் ஏலத்தை ஆதரிக்கவில்லை என்கிறார். பூட்டைத்தான் உடைத்தேன். கதவை திறக்கவில்லை என்பது போல அவரது வாதம் இருக்கிறது. பூட்டை உடைத்தால்தான் கதவு திறக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் கொண்ட கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் இரட்டை நாக்குடன் பேசுவது வாதமா? உளறலா? வஞ்சகமா?