நூறு கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கி இருக்கிறார் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ரோஜா. விரைவில் விஜயவாடா போலீஸ் கமிஷனர் முன் ரோஜா விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
கடந்த 2019 முதல் 2024 வரையிலும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்டி இருந்தது. இந்த ஆட்சியில் கடைசி இரண்டு ஆண்டுகள் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார் நடிகை ரோஜா.
’ஆடுதாம் ஆந்திரா’ என்று விளையாட்டு விழாவினை நடத்தினார் அப்போது முதல்வராக இருந்த ஜெகன்மோகன்ரெட்டி. இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றும், திறமையான இளைஞர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் 47 நாட்கள் இந்த விளையாட்டு விழாவினை நடத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி அன்று குண்டூரில் இந்த விழாவினை தொடங்கி வைத்தார் ஜெகன்மோகன்ரெட்டி. டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் 10ம் தேதி வரையிலும் ஆந்திரா முழுவதும் 9 ஆயிரம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நடந்து வந்தன.
இந்த விளையாட்டு விழாவுக்கு 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், இதில் பெரிய அளவில் ஊழல் நடந்தது என்றும் அப்போதே எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியை இழந்தது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒய்.எஸ்.ஆர். ஆட்சியின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருகிறார். இந்த வகையில்தான் இந்த விளையாடு விழா ஊழல் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
முன்னால் தேசிய கபடி வீரர் மற்றும் ஆத்யா பாட்யா சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.டி.பிரசாத், ஆடுதாம் ஆந்திரா விளையாட்டு விழாவினால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அளித்த புகாரின் பேரில் இந்த விளையாட்டு விழா குறித்து முன்னாள் ஆந்திர ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தர்மனா கிருஷ்ணதாஸ், முன்னாள் அமைச்சர் ஆர்.கே.ரோஜா ஆகியோர் மீதான ஊழல் புகாரினை ஆந்திரா சிஐடி விசாரணையை தொடங்கி இருக்கிறது.
விரைவில் ரோஜா விசாரணைக்கு நேரில் ஆஜராக இருக்கிறார்.