அதிமுகவின் மாஜிக்கள் பலரும் தவெகவுக்கு வருகிறார்கள் என்று செங்கோட்டையன் சொல்லி வந்த நிலையில் விஜய்யும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மாஜிக்கள் யார் யார்?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தபோது அவருடன் அதிமுக முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏக்களும் தவெகவில் இணைந்தனர்.
இதன் பின்னர் மேலும் பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாது மாற்று கட்சியில் இருந்து பல மாஜிக்களும் தவெகவுக்கு வர இருக்கிறார்கள் என்ற பேச்சு எழுந்த போது, செங்கோட்டையனிடம் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’டிசம்பர் இறுதியில் தவெக கூட்டணி வலுப்பெறும். பொறுத்திருந்து பாருங்கள்’’என்று சொன்னார்.

யார் யார்? என்ற கேள்விக்கு, ‘’ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு போகும் போது சில சம்பிரதாயங்கள் உண்டு. அது எல்லாம் முடிந்த பின்னர் அவர்களை முறைப்படி தவெகவில் இணைத்துக்கொள்ளுவார் தலைவர்’’ என்றார்.
நேற்று ஈரோட்டில் நடந்த தவெக மாநாட்டில் இதை விஜயும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ’’அண்ணன் செங்கோட்டையன் வந்தது தவெகவுக்கு பலம். அவரைத்தொடர்ந்து மேலும் பலர் தவெகவுக்கு வர இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்படும்’’ என்று கூறியிருக்கிறா விஜய்.
இதையடுத்து அதிமுகவில் இருந்து வரும் மாஜிக்கள் யார் யார்? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.

செங்கோட்டையன் மூலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலரும் தவெகவில் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தவிர, அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரும் தவெகவில் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 10க்கும் மேற்பட்ட அதிமுக முக்கிய முகங்களை தவெகவுக்கு கொண்டு வருகிறார் செங்கோட்டையன் என்கிறது ஈரோடு தவெக வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
