
ஐந்தாம் தேதி முடிவைச் சொல்கிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இதற்கு போட்டியாக செங்கோட்டையன் விவகாரம் குறித்து மதுரை பிரச்சாரத்தில் பேசுகிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்தார் பழனிசாமி. ஆனால் மதுரை மேலூரில் இது பற்றி பேசாமல் சென்றுவிட்டார். அதிமுகவில் சஸ்பென்ஸ் போட்டா போட்டி வலுக்கிறது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கும் இடையே மீண்டும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் செங்கோட்டையன்.

வரும் 5ம் தேதி அன்று தனது முடிவை அறிவிக்கப்போகிறார் என்று கூறியிருக்கிறார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலகப்போகிறாரா? அதிமுகவில் இருந்து விலகி ஓபிஎஸ், தினகரன் ஆகியோருடன் கைகோர்த்து விஜய்யுடன் கூட்டணி அமைக்கப்போகிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதனால் அதிமுகவில் சலசலப்பு எழுந்திருக்கும் நிலையில் இன்று இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிகள் பிரச்சார பயணத்தின் போது பதிலளிப்பதாக சொல்லி இருந்தார்.

அதன்படி இன்று மாலையில் மதுரை மேலூரில் நடந்த பிரச்சாரத்தில் பழனிசாமி பேசியபோது, செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், திமுகவுக்கு எதிரான பேச்சுடன் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார். செங்கோட்டையன் விவகாரத்தில் பழனிசாமி சஸ்பென்ஸ் வைத்தது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.