விஜய் நடிக்கும் ஜனநாயகன் பொங்கலுக்கு திரைக்கும் வரும் நிலையில் அதற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படமும் பொங்கல் களத்தில் இறங்குகிறது.
பராசக்தி படத்தின் கதை மிகச்சிறப்பாக இருப்பதாக அப்படத்தை பார்த்த பலரும் நம்பிக்கை தெரிவித்ததால் அந்த உற்சாகத்தில்தான் விஜய் படத்துடன் மோத தயார் ஆகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

துப்பாக்கி கொடுத்தவர் நெற்றியிலேயே துப்பாக்கியை வைக்கிறாரே சிவகார்த்திகேயன் என்று விஜய் தரப்பினர் புலம்பினாலும், ரஜினியின் தீவிர ரசிகராக இருந்தாலும் கூட சூப்பர் ஸ்டார் பட்டத்தின் விவகாரத்தில் அவரையே எதிர்த்து விஜய் தாண்டவம் ஆடவில்லையா? பிசினஸ் என்றால் அப்படித்தான் இருக்கும் பாஸ் என்கிறார்கள் எஸ்.கே. தரப்பினர்.
ஜனநாயகனுடன் பொங்கலுக்கு திரைக்கு வருவதோடு மட்டுமல்லாது ஜனநாயகன் படத்திற்கு தமிழ்நாட்டில் எத்தனை ஸ்கிரீன் ஒதுக்கப்படுகிறதோ அதற்கு இணையாக பராசக்தி படத்திற்கும் ஸ்கிரீன் ஒதுக்கப்பட இருக்கிறது. இதனால் விஜய் படத்தின் வசூல் 40 சதவிகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

சிவகார்த்திகேயன் தரும் நெருக்கடி ஒரு பக்கம் இருக்க, அஜித் நடித்த மங்காத்தா படமும் பொங்கல் முடிந்த மறு வாரத்தில் ரீலிஸ் ஆகிறது. இதனால் ஜனநாயகன் படத்தின் வசூல் மேலும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
ஜனநாயகன் படம் கடைசிப்படம் என்பதால் இந்தப்படத்தின் வசூல் ஒரு சாதனை படைக்க வேண்டும். அது தமிழ்சினிமாவில் பேசப்பட வேண்டும் என்று நினைத்திருந்த விஜயின் கனவுக்கோட்டை தகர்ந்து போவதில் அவரது ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
