இரண்டாண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் இன்றைக்கு தூத்துக்குடி தவெக மாவட்டச் செயலாளர் பொறுப்பு அறிவிக்கப்பட இருந்த நிலையில் அதிருப்தியாளர்கள் பனையூருக்கு திரண்டு வந்து தவெக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் ஆண் மற்றும் பெண் பன்சர்கள் குவித்து அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
தவெக தொடங்கி மூன்றாம் ஆண்டை எட்ட இருக்கிறது. ஆனாலும் மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் அக்கட்சியில் எழுந்த பிரச்சனை இன்னமும் நீடித்து வருகிறது.

தவெகவுக்கு இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என்று முடிவெடுத்து அதன்படி மாவட்டச் செயலாளர்களை நியமித்து வந்தார் தவெக தலைவர் விஜய்.
ஐந்து கட்டங்களாக 95 மாவட்டச் செயலாளர்களை அறிவித்திருந்தார் விஜய். இதில் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி பல போராட்டங்கள் நடந்தன. அடுத்தகட்டமாக 25 மாவட்டச் செயலாளர்களை அறிவிப்பதில் சிக்கல் எழுந்தது. சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், பெரம்பலூர் உள்ளிடட் 6 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதில் சிக்கல் எழுந்தது.

பல மாவட்டங்களிலும் இதே போன்று அடுத்தடுத்து பிரச்சனை எழுந்ததால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் அமைப்பு ரீதியாக மொத்தம் 131 மாவட்டங்களாக எண்ணிக்கையை உயர்த்தினார் விஜய். இதில் 120 மாவட்டங்களுக்கு ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கோஷ்டி பூசலால் மீதமுள்ள 11 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
தூத்துக்குடியில் பெண் நிர்வாகி தலைமையிலான கோஷ்டியும், தொழிலதிபர் தலைமையிலான கோஷ்டியும் மா.செ. பதவிக்கு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது.
அஜிதா ஆக்னல் என்கிற மீனவ சமூகத்தைச் சேர்ந்த பெண் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் பொறுப்பேற்று கவனித்து வந்தார். ஆனால் தவெக தலைமையோ 6 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதிக்கு மட்டும்தான் பொறுப்பாளராக நியமிக்க முடியும் என்று தலைமை முடிவெடுத்தது. ஆனால் அஜிதாவோ மாவட்டம் முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்று விரும்பினார்.

இந்நிலையில் இன்றைக்கு தூத்துக்குடியில் உள்ள 6 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவிக்க இருக்கிறார் விஜய். இதில் அஜிதா தவிர்த்து மற்ற 5 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுநாள் வரையிலும் அஜிதா கேட்டு வந்த பொறுப்பு நாடார் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வெகுண்டெழுந்த அஜிதா, விஜய்யிடம் நேரில் முறையிட தனது ஆதரவாளர்களுடன் இரண்டு பேருந்துகளில் பனையூருக்கு சென்றார். கட்சி அலுவலகத்திற்கு முன்பாகவே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

விஜயை பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதால் கலங்கிய கண்களுடன் காத்திருந்தார். அசம்பாவீதம் ஏதும் நடக்காமல் இருக்க பவுன்சர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அஜிதாவுடன் பெண் தொண்டர்கள் அதிகம் வந்திருப்பதால் பெண் பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பனையூரில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
என்ன முடிவெடிக்கப்போகிறார் விஜய்?
