
எந்த விழாவிலும் பங்கேற்பதில்லை என்ற முடிவுடன் இருக்கும் அஜித்தை எப்படியாவது பாராட்டு விழாவில் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்ற ஆளுநர் மாளிகையின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
அண்மையில் ‘பத்ம’ விருதுகளை அறிவித்திருந்தது மத்திய அரசு. இதில் தமிழ்நாட்டில் நடிகர் அஜித், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த 13 பேரையும் ஆளுநர் மாளிகைக்கு கடந்த 15ம் தேதி அன்று அழைத்து பாராட்டினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்த விழாவில் பங்கேற்க வருமாறு நடிகர் அஜித்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது முதல், அந்த விருது அவருக்கு தகுதியில்லாதது என்று பலரும் விமர்சித்து வந்தனர். அஜித்தை பாஜகவுக்கு இழுக்கவே மத்திய அரசு இந்த விருதை அறிவித்திருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் ஆளுநரின் அழைப்பை புறக்கணித்தார் அஜித்.
தான் பங்கேற்காமல் போனதற்கான காரணத்தைச் சொல்லி ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பி இருந்தாராம் அஜித். அதில், எந்த ஒரு விழாவிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறேன். அதனால் இந்த விழாவில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்பதை தெரிவித்திருந்த அஜித், விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக வருந்தப்படுகிறேன் என்றும் தெரிவித்திருந்தாராம்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாட்டில் எதிரான மனநிலை இருப்பதாலும், இந்த விழாவில் பங்கேற்றால் அரசியல் சாயம் பூசிவிடுவார்கள் என்பதாலும்தான் அஜித் இந்த விழாவை புறக்கணித்துவிட்டார் என்கின்றனர் அஜித் தரப்பினர்.