
All 9 convicts get life sentences for sexual assaults in Pollachi
இதுவும் போதாது.. இன்னும் கடுமையான தண்டனை தரவேண்டும் என்று சொன்னால் அது தவறல்ல. அந்தளவுக்கு கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்தான், பொள்ளாச்சியில் இளம்பெண்களை வலுக்கட்டாயப்படுத்தி, பாலியல் தொந்தரவு தந்து, அதனை வீடியோ எடுத்து, மீண்டும் மீண்டும் அவர்களை சிதைத்த அரசியல் பின்னணி கொண்ட கூட்டத்தினர். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே அதிர வைத்த கொடூரமான குற்றம், பொள்ளாச்சி பாலியல் வழக்கு.
அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற 2019ஆம் ஆண்டில், அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்த இளைஞர்கள் (இதில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் உண்டு), அதிகார போதை மற்றும் இதர போதைகளுடன் வெறியேறி, இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் உறவு கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அதை வீடியோவும் எடுத்து, அதை வைத்து மிரட்டி, தாங்கள் விரும்பும் பொழுதுகளில் இளம்பெண்கள் வந்தாக வேண்டும் என்று ப்ளாக்மெயில் செய்து வந்தனர்.
2019க்கு முன்பே இரண்டாண்டுகளாக இத்தகைய கொடூரங்கள் நிகழ்ந்து வருவது குறித்து, உள்ளூர்வாசிகளுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும், அ.தி.மு.க. அமைச்சர்களின் செல்வாக்கும் பின்னணியும் இருந்ததால், யாரும் வெளிப்படையாகப் புகார் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், பாதிக்கப்பட்ட இளம்பெண், அந்த காமுகக் கூட்டத்திடமிருந்து தப்பி வந்து தன் குடும்பத்தினரிடம் விவரம் தெரிவித்ததுடன், தன் சகோதரர் உதவியுடன் காவல்துறையில் புகாரும் அளித்தார். அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியாளர்களுக்குப் பயந்து பம்மியது.
இதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., மகளிர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க முயற்சித்து, கட்சியினரைக் கைது செய்தது அ.தி.மு.க. அரசு. இளம்பெண்களைப் பாதுகாப்பதற்குப் பதில், குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் முனைப்பாக இருந்தது. “குற்றம் நடந்ததற்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று கேட்டார் முதலமைச்சர் பழனிசாமி. புகார் தந்த இளம்பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டனர்.
பாலியல் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அ.தி.மு.க.வில் செல்வாக்குப் படைத்தவர்களாகவும், அ.தி.மு.க. குடும்ப வாரிசுகளின் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்ததால், விசாரணை விரிவடைந்தால் முக்கிய பிரமுகர்கள் தரப்பிலேயே குற்றவாளிகள் சிக்குவார்கள் என்பதால், பொள்ளாச்சி கொடூரத்தை மூடி மறைப்பதில் அ.தி.மு.க அரசு தீவிரவமாக இருந்தது. இந்த நிலையில்தான், இளம்பெண்களை பெல்ட்டால் அடித்து, பாலியல் உறவுக்கு அந்த காமுகக் கூட்டம் இணங்க வைக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியானது.
“அண்ணா.. பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா.. நானே டிரஸ்ஸை கழட்டிடுறேன் அண்ணா” என்ற இளம்பெண்ணின் கதறலும், “உன்னை நம்பித்தானே வந்தேன்” என்ற இயலாமையின் குரலும் இதயத்தை நொறுக்கியது. அந்த வீடியோவையும் அதிலிருந்த குரலையும் கேட்ட தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகப் பெண்கள், “இப்படிப்பட்ட கயவர்களை விட்டு வைப்பதா?” என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். எதிர்க்கட்சிகளின் போராட்டமும் வலுவடைந்த நிலையில், மாவட்ட காவல்துறை அதிகாரி மூலம், புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிடச் செய்து, மற்ற பெண்களை அச்சுறுத்தும் வேலையை செய்தது அ.தி.மு.க அரசு.
சி.பி.சி.ஐ.டி போலீசின் விசாரணை என்பது குற்றவாளிகளைப் பிடிப்பதற்குப் பதில், பாலியல் குற்றம் தொடர்பான வீடியோவையும் செய்தியையும் வெளியிட்ட பத்திரிகையை மிரட்டும் வகையிலேயே இருந்தது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் தொடர்ச்சியானப் போராட்டம் மற்றும் வலியுறுத்தலுக்குப் பிறகே, சி.பி.ஐ. வசம் வழக்கை ஒப்படைக்க ஒப்புக்கொண்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. கைது செய்யப்பட்ட 9 பேரைக் காப்பாற்றும் வகையில், சி.பி.ஐ.க்கு ஒப்படைப்பதாக அறிவிக்கப்பட்ட பிறகும், சி.பி.சி.ஐ.டி வசமே வழக்கு இருந்தது. நீதிமன்றம் கண்டித்த பிறகே, சி.பி.ஐ வசம் சென்றது.
தமிழ்நாட்டில் 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சாட்சியமாக அளித்தனர். குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்களில் அழிக்கப்பட்ட வீடியோக்கள் மீட்கப்பட்டன. வழக்கு வலுவாக அமைந்தது. இதனையடுத்துதான், மே 13ந் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 9 பேரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை ஆயுள், நான்கு ஆயுள் தண்டனை பெற்றவர்களும் உண்டு.
டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண் பாலியல் கொடுமைக்குள்ளான பிறகு, பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பெருகி வந்த நிலையில், பொள்ளாச்சி கொடூரம் ஒரு கருப்பு பக்கமாக மாறியது. அரசியல் அதற்கொரு காரணமாக இருந்தது. இந்த வழக்கில் தப்பியவர்களும் உண்டு. சிக்கியவர்களைத் தப்ப விடக்கூடாது என்பதே பெரும்பான்மையான எதிர்பார்ப்பு. மக்கள் நம்பியது, நீதிமன்றத்தைத்தான்.
தற்போதைய தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள தண்டனையைவிட கூடுதல் தண்டனை அளித்திருந்தாலும் மக்கள் வரவேற்கவே செய்வார்கள். மேல் முறையீடுகளில் எக்காரணம் கொண்டும் இந்தத் தண்டனை குறையக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
xpe8u7