
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தனது உறவை முறித்துக்கொண்டது என்று அறிவித்தார் ஓபிஎஸ் அணியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அவர் மேலும், ‘’இன்றைய நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை. எதிர்காலத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து சிறிது காலம் கழித்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். ஆகவே, தேசிய ஜனநாயக கட்சியில் இருந்த உறவு முறிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அணி விலகியது ஏன்? தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து மீண்டும் பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் இணைந்தது, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தொடங்கியது எல்லாமே பாஜகவின் வழிகாட்டுதலின்படிதான் என்கிறது பன்னீர் தரப்பு. அப்படியிருக்கையில், 2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமியுடன் கைகோர்த்துக்கொண்டு தங்களை அரசியல் அனாதைகள் ஆக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டதால் அதிருப்தியில் இருந்த பன்னீர்செல்வம் அணி, அமித்ஷாவின் சென்னை வருகையின் போது அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்தது. பிரதமர் மோடியின் சென்னை வருகையில் அவரை சந்திக்கவும் அனுமதி கிடைக்காததால் இந்த மன உளைச்சல் அதிகமானது.
இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது. பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டனர் பன்னீர் அணியினர். இன்று பாஜகவில் விலகுவதாக அறிவித்து விட்டனர்.

முன்னதாக இன்று காலையில் நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் பன்னீர்செல்வம். முதல்வருடனான அந்த சந்திப்பு குறித்து கேட்டதற்கு, ‘’வணக்கம் சொல்லிவிட்டு வந்தேன்’’ என்கிறார். இதைத்தான் 15 நிமிடங்கள் பேசினாரா பன்னீர்? என்கிறார்கள்.
யாருடன் கூட்டணி என்பது குறித்து எதிர்காலத்தில் அறிவிப்பதாக சொல்லி இருக்கிறது பன்னீர் அணி. சட்டமன்றத்திலேயே கலைஞர் புகழ் பாடியவர் பன்னீர். அதிமுக எம்.பியாக இருக்கும் போதே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தவர் பன்னீர் மகன் ஓ.பி.ரவீந்திரநாத். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பன்னீர் அணி திமுக பக்கம் சாய்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அது தொடர்பாகத்தான் முதல்வரிடம் முன்கூட்டியே பேசி இருக்கிறார் பன்னீர் என்கிற பேச்சு பரவுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று மாலையில் முதல்வரின் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து பேசினார் பன்னீர்செல்வம். முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகத்தான் இந்த சந்திப்பு என்று பன்னீர் தரப்பு சொல்கிறது. ஆனால், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கே இந்த சந்திப்பு நடந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.