
தன் கணவர் ஆம்ஸ்ட்ராங் முதலாமாண்டு நினைவு தினத்தில் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் உள்ளார் பொற்கொடி.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜுலை மாதம் 5ஆம் தேதி மாலையில் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சின் மாநிலத்தலைவர் ஆனார் ஆனந்தன். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனந்தனுக்கும் பொற்கொடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதில் பொற்கொடி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பொற்கொடி இனிமேல் கட்சிப்பணிகளில் ஈடுபட மாட்டார். அவர் குடும்பத்தையும் குழந்தையையும் பார்த்துக் கொள்வார். அவரது குடும்பத்தை கட்சி பார்த்துக் கொள்ளும் என்று தேசியத்தலைவர் மாயாவதி சொன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி அன்று அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக ஊடகங்களில் புலம்பித்தீர்த்தார் பொற்கொடி. பகுஜன் சமாஜ் கட்சியை ஆந்தனிடம் இருந்து மீட்டெடுக்கப் போவதாக பொற்கொடி சொல்லி வந்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. அதன் பின்னர் அவர் தவெகவில் இணையப்போவதாக செய்திகள் வந்தன. பொற்கொடி வைத்த சில நிபந்தனைகளால் தவெக எதுவும் பதில் சொல்லாமல் இருக்க, அதன் பின்னர் அவர் அதிமுகவில் இணையப்போவதாக செய்திகள் பரவின.

அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி ஆகியோர் மூலம் பொற்கொடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். பொற்கொடி சார்பில் வழக்கறிஞர் ஒருவர் பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கிறார். பொற்கொடிக்கு கட்சியில் பதவி வேண்டும், எம்.எல்.ஏ.சீட் கொடுக்க வேண்டும் என்று கேட்ட வழக்கறிஞரிடம், முதலில் சட்டமன்ற தேர்தலில் வேலை செய்யச்சொல்லுங்க. தேர்தல் முடிந்ததும் கட்சிப்பதவி பற்றி பேசிக்கலாம். உள்ளாட்சி தேர்தலில் பொற்கொடி ஆதரவாளர்களுக்கு உரிய இடங்களையும் தரலாம் என்று சொல்லி இருக்கிறார்.
இதில் பொற்கொடிக்கு திருப்தி ஏற்படவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலிலேயே தனக்கு எம்.எல்.ஏ. சீட்டும், கட்சிப்பதவியும் வேண்டும் என்பதில் பொற்கொடி பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் தனிக்கட்சி தொடங்கினால் உங்கள் பின்னால் வரத்தயார் என்று ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் கொடுத்த தெம்பில் தனிக்கட்சி தொடங்குவதென முடிவெடுத்திருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் நினைவு தினமான வரும் ஜூலை 5ஆம் தேதி அன்று தனிக்கட்சி தொடங்க ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்று தகவல்.
சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமையும் பட்சத்தில் அக்கூட்டணியில் இணைவது என்ற முடிவை எடுத்திருக்கிறார் பொற்கொடி என்றும் தகவல்.
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்தது கூட, கட்சி அறிவிப்பிற்கான மறைமுக அழைப்பு என்றே சொல்கின்றனர்.

தங்களின் பகுஜன் சமாஜ் கட்சியில் உள்ள யானையின் சின்னத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியிலும் வைத்துள்ளார்கள் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆனந்தன் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். பொற்கொடியோ தவெகவுடன் கைகோர்க்கத் திட்டமிட்டுள்ளார்.
பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாசையும் சந்தித்து பொற்கொடி அழைப்பிதழ் கொடுத்திருப்பதைப் பார்த்தால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

வளைத்து வளைத்து அவர் அழைப்பிதழ் கொடுத்து வருவதைப் பார்க்கும் போது வெறும் நினைவேந்தல் நிகழ்ச்சி மட்டும் அல்ல; தனிக்கட்சி அறிவிப்பு இருக்கும் என்றே தெரிகிறது.