அல்லு அர்ஜூன், மோகன் பாபு விவகாரங்களில் கறாராக உள்ளார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. இதனால் கொதித்துக்கிடக்கிறது தெலுங்கு திரையுலகம். ரேவதி விவகாரத்தில் மக்கள் ஒரு பக்கம் கொந்தளிக்கிறார்கள். இதனால் திகுதிகுவென்றிருக்கிறது தெலுங்கானா.
என்ன நடக்கிறது தெலுங்கானாவில்?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் ‘புஷ்பா-2’ படம் கடந்த ஐந்தாம் தேதி அன்று வெளியானது. இந்தியா முழுவதுமே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் வசூல் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
படம் ரிலீசுக்கு முதல் நாள் 4ஆம் தேதி அன்று சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தெலுங்கானாவில் ‘சந்தியா’ தியேட்டருக்கு திறந்தவெளி காரில் வந்து படம் பார்த்தார் அல்லு அர்ஜூன். படம் பார்க்க குவிந்திருந்த ரசிகர்களுக்கு கை காட்டியபடியே வந்தார்.
அல்லு அர்ஜூன் உச்ச நட்சத்திரம் என்பதால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதனால் அவரைக்காண திரண்டிருந்த கூட்டம் முண்டியடித்ததில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதுடைய ரேவதி என்ற பெண் ரசிகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் நெரிசலில் சிக்கி மூளைச்சாவு அடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வளவு பெரிய நடிகர் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டருக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று பொலீசார் எச்சரித்து அனுமதி கொடுக்க மறுத்தும் அதை மீறி வந்து உயிரிழப்பையும் ஏற்படுத்தி விட்டதால் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதாகி ஒரு இரவு சிறையில் இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
கொந்தளித்த முதல்வர்:
சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூனை தெலுங்கு திரையுலகத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனால் கடுப்பான தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ‘’ஒரு ரசிகை உயிரிழந்துவிட்டார். அவரது மகன் கோமாவில் உள்ளார். இதைப்பற்றி கவலை இல்லாமல், அரை நாள் மட்டும் சிறையில் இருந்த அல்லு அர்ஜூனை தெலுங்கு திரையுலகமே திரண்டு சென்று ஆறுதல் சொல்கிறது.
அல்லு அர்ஜூனுக்கு என்ன கை,கால் போய்விட்டதா? இல்லை, கிட்னி போய்விட்டதா? தெலுங்கு சினிமா உலகம் ஏன் இப்படி இருக்கிறது? அல்லு அர்ஜூன் என்ன மாதிரியான மனிதர்?’’ என்று கொந்தளித்துள்ளார்.
’’தன் ரசிகரும், ரசிகையும் கண் முன்னாலேயே சரிந்து விழுந்ததை பார்த்தும், கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் தியேட்டரில் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் அல்லு அர்ஜுன். காவல்துறை அதிகாரி, எம்.எல்.ஏ. சென்று நிலைமையை எடுத்துச்சொல்லியும் வெளியே வராமல் படம் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் அல்லு அர்ஜூன். போலீஸ் உயரதிகாரி சென்று சொன்னபிறகே தியேட்டரை விட்டு வெளியேறினார் அல்லு அர்ஜூன். அதன் பின்னரும் அவர் ரோடு ஷோ நடத்தினார். சக்ஸஸ் மீட் நடத்தினார். தன்னால் ஒருவர் உயிழந்துவிட்டார் என்று கூட நினைக்காமல் எப்படி அவரால் இப்படி நடந்துகொள்ள முடிந்தது? இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்தே தீருவேன்’’ என்று சட்டமன்றத்தில் ஆவேசப்பட்டுள்ளார் முதல்வர்.
அல்லு விளக்கம்:
முதல்வர் ரேவந்த் ரெட்டி இப்படி குற்றம் சாட்டி இருக்கும் நிலையில், கூட்ட நெரிசல் மட்டுமே தனக்கு தெரியும். மற்றபடி, ரசிகை உயிரிழந்த விசயம் மறுநாள்தான் தெரியவந்தது. அதிகாரிகள் வந்து விவரத்தை சொல்லியும் அலட்சியம் காட்டவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் அல்லு அர்ஜூன்.
காவல்துறை காட்டம்:
தாங்கள் எவ்வளவோ அறிவுறுத்தியும், எச்சரித்தும் அல்லு அர்ஜூன் கேட்கவே இல்லை. அதனால் அவர் மீதான நடவடிக்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது தெலுங்கானா காவல்துறை. இன்று விசாரனைக்காக போலீசில் நேரில் ஆஜராகி இருக்கிறார் அல்லு அர்ஜூன். 3 மணி நேரம் நடந்த விசாரணயில், 20 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
சிறை:
ரேவதி விவகாரத்தில் அவரது குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்று சொல்லி, போராட்டம் நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கடும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
’’சந்தியா தியேட்டரில் நடந்தது ஒரு விபத்து. பல ஆண்டுகளாக நான் அந்த தியேட்டரில் இப்படித்தான் சென்று படம் பார்க்கிறேன். அன்றைக்கு அந்த அசம்பாவீதம் நடந்துவிட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியளிக்க உள்ளேன். அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக உள்ளேன். அதற்கு போலீசார் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை’’ என்று சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுன் விளக்கம் அளித்திருந்தார்.
பழிக்குப் பழியா?
அல்லு அர்ஜூன் வீட்டினை தாக்கியது மாணவர்கள் அல்ல. ரேவந்த் ரெட்டியின் தொண்டர்கள் என்றும், ஆளுங்கட்சியின் ஆதரவு இல்லாமல் அவர்கள் அல்லு அர்ஜூன் வீடு மீது தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
ரசிகை ரேவதி உயிரிழந்தது விபத்துதான். அதற்காக அல்லு அர்ஜுனை இந்த அளவிற்கு கட்டம் கட்ட வேண்டிய தேவையில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான், ரேவந்த் ரெட்டி இந்த விவகாரத்தில் இவ்வளவு கறாராக உள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
திகுதிகு :
ரேவந்த் ரெட்டி தொண்டர்கள், அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தெலுங்கி முன்னணி நடிகர் மோகன் பாபுவின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மகன் மீதான சொத்து தகராறு குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார் மோகன் பாபு.
தெலுங்கானா அரசு இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளதால், மோகன் பாபுவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மோகன் பாபு கைதாகலாம் என்ற சூழல் நிலவுகிறது.
அல்லு அர்ஜுன் – மோகன் பாபு விவகாரங்களால் திகுதிகுவென்றிருக்கிறது தெலுங்கானா.