தெலுங்கு சினிமா துறையினருக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 படம் வெளியானபோது தியேட்டர் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அம்மாநில சட்டமன்றத்தில் விவரித்துள்ளார்.
அவர் பேசியதாவது,
அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா, கண்களை இழந்தாரா, அல்லது கிட்னியை தான் இழந்தாரா? அல்லு அர்ஜுனின் இல்லத்துக்கு பிரபலங்கள் விரைந்து சென்று அவரை பார்க்க வேண்டிய அவசியம் என்ன?
காயமடைந்த சிறுவனைப் பற்றி சினிமா பிரபலங்கள் யாராவது அக்கறை காட்டினார்களா? சினிமா பிரபலங்கள் யாராவது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று தான் பார்த்தார்களா?
புஷ்பா 2 படம் வெளியான முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார்; மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
அப்போது சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் மகனும் பலத்த காயமடைந்தார். பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்த போதிலும், தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்றுகொண்டு கை அசைத்துக் கொண்டிருந்தார்; அவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்?
போலீசார் கைது செய்வோம் என மிரட்டிய பிறகே அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறினார். இனி தெலங்கானாவில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி தரப்படாது; டிக்கெட் கட்டண உயர்வுகளும் இருக்காது.
என இவ்வாறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தெலங்கானா சட்டமன்றத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்