சென்னை அடுத்த பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பாக பாஜக கொடிக்கம்பம் நட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அண்ணாமலையின் ஆதரவாளர் அமர் பிரசாத் ரெட்டி, நவம்பர் 10ம் தேதி ஜாமீன் பெற்று மறுநாள் வெளியே வந்தார்.
அப்போதே மேலும் 2 வழக்குகள் அவர் கைது செய்யப்பட்டார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய வழக்கில் கோட்டூர்புரம் போலீசார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர்.
வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த பாஜக போராட்டத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்த வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர்.
‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றம் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் அண்ணாமலையின் ஆதரவாளர் அமர் பிரசாத்தை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் மும்பை, குஜராத், ஆந்திரா என்று பல மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
கட்சி நிதி வசூல் விவகாரத்திலும் அமர் மீது சொந்த கட்சியினரே பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லி வந்தனர்.
இப்படி பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வந்த அமர் பிரசாத் ரெட்டியை இதை விட பெரிய பிரச்சனையில் மாட்டிவிட்டேன் என்கிறார் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
இதுகுறித்து தமிழிசை பேசும் ஆடியோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ‘’அமர்பிரசாத்தை நான் தான் கட்சியில் சேர்த்துவிட்டேன் என்று அவரே சொல்லி இருக்கிறார். அதைவிட பெரிய பிரச்சனையில் அவரை நான் மாட்டிவிட்டேன். வெளியே வரவே முடியாத பிரச்சனையில் மாட்டிவிட்டேன். அதாவது அவரின் கல்யாணத்தை நான் தான் நடத்தி வைத்தேன். அவர் எவ்வளவோ பிரச்சனையில் மாட்டியிருக்கிறார் என்று பலரும் சொல்கிறார்கள். அதெல்லாம் பெரிய பிரச்சனை இல்லை. இதுதான் பெரிய பிரச்சனை’’என்கிறார் தமிழிசை.