குஜராத்: Reliance, Nayara உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், இந்தியாவிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகங்களை ஜாம்நகரில் கொண்டுள்ளன.
அதில், முகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம், சர்வதேச முன்னெடுப்பு எனக் கூறி ‘விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம்’ என்ற தனியார் வனவிலங்குகள் பூங்காவை அமைத்து நிர்வகித்து வருகிறது.
Reliance பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் உள்ள சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 பிப்ரவரி 26-ம் தேதி Vantara என்கிற பெயரில் வனவிலங்குகளுக்கான புதிய திட்டத்தை முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி அறிமுகம் செய்து, எதிர்கால திட்டங்கள் பற்றியும் பகிர்ந்திருந்தார்.
குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாவின் எதிரொலியால், Vantara வனவிலங்கு மையம் பற்றிய செய்திகளை பல்வேறு முன்னணி ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன.
இந்த சூழலில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அம்பானி குடும்பத்தின் இந்த Vantara மையம் இந்திய வனவிலங்கு சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
யானைகளை சட்டவிரோதமாக Vantara மையத்திற்கு கொண்டுவருவது உள்ளிட்டவை பற்றிய கவலைகளை எழுப்பி Himal SouthAsian செய்தி இணையதளம் பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய விசாரணை செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
110 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, 200 யானைகள் மற்றும் சிங்கம், புலி, சிறுத்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட பூனை இனங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய திறந்தவெளி உயிரியல் பூங்காவை எப்படி உருவாக்கினார் என்பது பற்றியும் Himal SouthAsian இணையதளம் விவரித்துள்ளது.
‘காடுகளின் நட்சத்திரம், என்று பொருள்படும் Vantara மையத்தில் அழிவின் விளிம்பில் உள்ள Spix’s Macaws விலங்கு உட்பட பல அரிய உயிரினங்கள் உள்ளன.
2022-23 ஆண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் அறிக்கையின்படி, Vantara-வில் 134 இனங்களைச் சேர்ந்த 3889 பறவைகள் மற்றும் விலங்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளைப் பிடிப்பதற்கும் யானைகளை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கும் இந்திய சட்டங்கள் தடை விதித்துள்ளன. மேலும் யானை வைத்திருப்பவர்கள் அவற்றின் பிறப்பு, தாய் யானையின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை கொண்டு நிரூபிக்க வேண்டும்.
ஆனால் சமீப ஆண்டுகளாக அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இருந்து யானைகள் ஜாம்நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
Himal SouthAsian தளத்தின் படி, யானைகளின் DNA விவரக்குறிப்பு, மைக்ரோசிப்பிங் மற்றும் காட்டு யானைகளைப் பிடிக்க தடை உள்ளிட்ட காட்டு யானைகள் கடத்தலுக்கு எதிரான 3 இந்திய பாதுகாப்பு சட்டங்கள் இதன் மூலம் நீர்த்துப்போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் “மத வழிபாடு அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும்” யானைகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதற்கான விதிகளை ஒன்றிய அரசு தளர்த்தியதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அந்த சட்டத்தில், தலைமை வனவிலங்கு காவலர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டிய விதியும் நீக்கப்பட்டது.
Vantara விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் உள்ள விலங்குகள் மட்டுமல்லாமல், ஏன் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் விலங்குகளும் கொண்டுவரப்படுகின்றன என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
முகேஷ் அம்பானி குடும்பத்திற்காக ஒன்றிய பாஜக அரசு கடந்த 2021-ல் இந்திய வனவிலங்குகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததா? என்கிற கேள்வியும் Himal SouthAsian தளத்தில் வெளியிடப்பட்ட விரிவான செய்தி அறிக்கையின் மூலம் எழும்புகிறது.
Himal Southasian Original News Articles:
Part 1: The costs of Reliance’s wildlife ambitions
Part 2: The costs of Reliance’s wildlife ambitions