ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று போதனை செய்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சிந்தூர் ஆபரேஷனை நிறுத்தியது நான்தான் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கவேண்டும் என்று வெளிப்படையாகவும் கேட்டார். ஆனால், உள்ளுக்குள் இருப்பது போர்வெறியும் ஆதிக்கமும்தான் என்பதை வெனிசூலா நாட்டின் மீது அமெரிக்கா நடத்தியிருக்கும் தாக்குதலும், அதன் அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டு, குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டிருப்பதும் காட்டுகிறது.
வெனிசூலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் போதை மருந்துகளை சப்ளை செய்தார் மதுரோ என்பதுதான் ட்ரம்ப் (Donald Trump) வைத்த குற்றச்சாட்டு. அதைத் தொடர்ந்துதான் இத்தனை நடவடிக்கைகளும். மதுரோவை கைது செய்த பிறகு ட்ரம்ப் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில், ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “எண்ணெய் வளம் தொடர்பாக வெனிசுலாவில் நமது பலமான ராணுவத்தின் இருப்பு இருக்கும். அங்கு மண்ணுக்கு அடியில் இருக்கும் பிரம்மாண்டமான செல்வத்தை நாம் வெளியே எடுக்கப் போகிறோம்… அந்த நாடு அமெரிக்காவிற்கு ஏற்படுத்திய இழப்பிற்கு ஈடாக அது அமெரிக்காவிற்கு கிடைத்தே தீர வேண்டும்.” என்று சொல்லியிருக்கிறார்.
போதை பொருள் சப்ளை என்பது ஒரு காரணம். வெனிசூலாவின் எண்ணெய் வளம்தான் தாக்குதலுக்கான காரணம். இதையேதான் ஈராக் மீது ஜார்ஜ் புஷ் காலத்து அமெரிக்கா நடத்திக் காட்டியது.
ட்ரம்ப் ஆசைப்பட்ட நோபல் பரிசு, வெனிசுலாவில் மதுரோ அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்த எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு (Maria Corina Machado) வழங்கப்பட்டது. மதுரோ இடதுசாரி ஆட்சியாளர். அவர் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. அதே நேரத்தில், அந்த இடத்திற்கு வர விரும்பும் எதிர்க்கட்சித் தலைவரையும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா நேரடியாவே ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. வெனிசூலா என்பது தென்னமெரிக்க நாடுகளில் ஒன்று. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் இதன் மூலம் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த அடாவடி போக்கையும், அமெரிக்க படைகள் நடத்தியுள்ள தாக்குதலையும் ‘பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பில் உள்ள நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால், இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா தரப்பில் கண்டனம் வரவில்லை. வெனிசூலான மீது நேரடித் தாக்குதல் என்றால், இந்தியா மீது வர்த்தகக் கட்டுப்பாடுகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார் ட்ரம்ப். ஆனாலும் மோடியின் பா.ஜ.க அரசு அமெரிக்காவை கண்டிக்காமல், வெனிசூலாவில் வாழும் குடிமக்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பிரதமர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அதே மாநிலத்தைச் சேர்ந்த ஜோஹ்ரன் மம்தானிதான் தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கின் புதிய மேயர். அவர் மிகக் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார். “இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் பிரகடனம் ஆகும். இது அந்த நாட்டின் ஃபெடரல் சட்டத்தையும் சர்வதேச சட்டத்தையும் மீறும் செயலாகும்.” என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பல அமைப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்க நகரங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
உள்நாட்டுக் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள் இவற்றை எதிர்கொள்ள முடியாத அதிபர் ட்ரம்ப், அதனை திசை திருப்ப வெனிசூலா மீது படையெடுப்பை நடத்தியுள்ளார் என்று அமெரிக்கர்களே கண்டிக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பிரதமர் மோடி ஏன் கண்டிக்கவில்லை? அவரும் ட்ரம்ப் போல்தான். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு, மதவெறியாட்டங்கள், பெண்கள் மீதான வன்முறை, வெளிநாட்டு முதலீடுகள் குறைவு உள்ளிட்ட பலவற்றிலிருந்து திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் மீதான எதிர்ப்புணர்வை அதிகப்படுத்துவதும், பாகிஸ்தான் வழியாக தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து இந்திய ராணுவத்தினரையும் அப்பாவி பொதுமக்களையும் தாக்கியபிறகு, பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்திவிட்டோம் என காலைத் தூக்கிவிட்டுக்கொள்வதும் தொடர்ச்சியான செயல்பாடுகளாக உள்ளன.
அமெரிக்க மோடியாக ட்ரம்ப்பும், இந்திய ட்ரம்ப்பாக மோடியும் இருக்கிறார்கள். அதனால்தான், ட்ரம்ப்பின் அமெரிக்க அரசு நடத்தியுள்ள அடாவடியைக் கண்டிக்க மோடி அரசுக்குத் துணிவும் இல்லை. விருப்பமுமில்லை. ஆனால், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளிலிருந்தும், அமெரிக்காவின் உள்ளூர் நகரங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு நாடும் தனக்கான அரசை அந்த நாட்டு மக்கள் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் அடாவடியால் அல்ல.
