வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்கும் ரஜினிகாந்த், கூலி படத்தில் அமீர்கானுடன் நடிக்கிறார்.
தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் தமிழில் பிரபல இயக்குநரான அட்லீ, பாலிவுட் சென்று ஷாருக்கானை வைத்து எடுத்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தது. இதையடுத்து மீண்டும் ஷாருக்கானை வைத்து படம் இயக்குகிறார் அட்லீ. தவிர தெலுங்கில் அல்லு அர்ஜூனை வைத்து இயக்குகிறார்.
அட்லீயை அடுத்து தமிழில் பிரபல இயக்குநராக உள்ளார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினியை வைத்து கூலி படத்தினை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜை அண்மையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சந்தித்து பேசியுள்ளார்.
அந்த சந்திப்பின்போது தன்னை வைத்து படமெடுக்க கேட்டிருக்கிறார் அமீர்கான். கூலி படத்தினை முடித்துவிட்டு கைதி -2 படத்தை கையில் எடுக்க வேண்டும். அதை அடுத்து விக்ரம் -2 படத்தினை கையில் எடுக்க வேண்டும். இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு அமீர்கானை வைத்து இயக்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் லோகேஷ்.
அந்த சந்திப்பின்போது ஒரு முக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கூலி படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார் லோகேஷ். அவரின் மீது உள்ள மதிப்பில், ரஜினிகாந்த் மீதுள்ள அன்பில் அதற்கு சம்மதித்திருக்கிறார் அமீர்கான்.
கூலி படத்தில் கேமியோ ரோலில் அமீர்கான் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாசின் கஜினி படத்திற்கு பிறகு தமிழ் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கிறார் அமீர்கான்.
ரஜினி – அமீன்கான் நடிப்பதால் பான் இந்தியா படமாக உருவாகி வரும் கூலி படத்திற்கு இப்போதே பாலிவிட்டில் கொடி பறக்கிறது.