தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பயண யாத்திரையின் நிறைவு விழா நேற்று புதுக்கோட்டையில் நட்ந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விழாவில் பங்கேற்றிருந்தார் . அவர் பேசியபோது, வரும் ஏப்ரல் மாதத்தில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி மலரும் என்று பேசி இருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்று அமித்ஷா பேசி இருக்கும் நிலையில், சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பழனிசாமி, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பேசி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே அதிமுக – பாஜக இடையே இந்த குழப்பம் நீடித்து வருகிறது. கூட்டணி அறிவிப்பை அமித்ஷா வெளியிட்டபோதே, 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றுதான் சொன்னார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பழனிசாமி எதுவும் மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆனால் அதன் பின்னர் பேசிய பிரச்சார கூட்டங்களில் எல்லாம் அதிமுக ஆட்சி அமையும் என்றே பேசி வருகிறார். அமித்ஷா சென்னை வரும்போதெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்றே சொல்லி வருகிறார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே குறிப்பாக அடுத்தகட்ட தலைவர்களுக்கு எப்படி சமாளிப்பது என்கிற வகையில் சிக்கலையும் தலைவலியையும் தந்தது.

எடப்பாடிதான் கூட்டணி தலைமை என்று அவரது ஆதரவாளர்கள் வீராவேசம் பேசி வந்தாலும் கூட, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோதும் கூட எடப்பாடி பெயரைச் சொல்லவில்லை அமித்ஷா. என்.டி.ஏ. ஆட்சி என்று அமித்ஷா சொல்ல, தனித்து ஆட்சி, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்கிறார் எடப்பாடி. சேலத்தில் பிரச்சாரம் இருப்பதைக் காரணம் காட்டி, அமித்ஷாவை வரவேற்கவும் செல்லவில்லை எடப்பாடி. அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம் எற்பட்டிருப்பது தெரிகிறது.
தேர்தல் நெருக்கத்திலும் கூட இப்படி இருப்பது சரியா? ஆளுக்கொரு திசையில் இழுத்துக்கொண்டு போனால் கூட்டணி வண்டியின் நிலைமை என்னவாகும்? வண்டி எப்படிப் போய்ச்சேரும்? என்ற கேட்கின்றனர் அடிமட்டத் தொண்டர்கள்.
அதிமுக – பாஜக கூட்டணி மீது கிராம மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதை சரிப்படுத்துங்கள் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி புலம்பிவிட்டு, இப்படி ஆளுக்கொரு திசையில் இழுத்துச்சென்றால் தொண்டர்களுக்கு மேலும் அதிருப்தியைத் தராதா? என்று கேட்கின்றன, எம்.ஜி.ஆர். மாளிகை மற்றும் கமலாலயம் வட்டாரங்கள்.
