திமுகவில் இணைகிறாரா? தவெகவில் இணைகிறாரா? அல்லது இதில் ஒரு கட்சியில் கூட்டணி அமைக்கிறாரா? என்ற பேச்சு இருந்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று தொடங்கிய இடத்திற்கே சென்றுவிட்டார் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்புக்கு ஒத்து வராததால் அவரை பழிவாங்கும் நோக்கில் அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாகச் சொன்ன ஓபிஎஸ், மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி இருக்கிறார்.
’’மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்ததால் சென்றேன். அவரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து சொல்லி வந்தேன்.

அதிமுகவின் சட்டவிதிகளை பழனிசாமி சின்னாபின்னமாக்கி விட்டார். அந்த சட்ட விதிகளை மீண்டும் உருவாக்க சட்ட போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த சட்ட போராட்டம் தொடரும். நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்கிறார்.
தெளிவான முடிவு எடுக்காமல் மீண்டும் மீண்டும் ஒருங்கிணைப்பை வலியுறுத்தி வந்ததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் வெளியேறினர். மீதம் இருப்பவர்களும் ஓபிஎஸ் அதிரடி முடிவை அறிவிக்கப்போகிறார் என்று நினைத்திருந்த நிலையில், மறுபடியும் இன்று ஒருங்கிணைப்பு குறித்து பேசி இருக்கிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் ஒருங்கிணைப்பு நிச்சயம் நடந்துவிடும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார் என்றால் ஒருங்கிணைப்பு விவகாரத்தில் அமித்ஷா, பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் என்றே தெரிகிறது.
