பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வந்த கடிதத்தை வெளியிட்டு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் தொகுதியின் எம்.பியும், பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 2024 மக்களவைத்தேர்தல் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா, 100க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்திருக்கிறார். இவரது பென் டிரைவில் 3000 ஆபாச வீடியோக்கள் உள்ளன என்று புகார்கள் எழுந்துள்ளன.
பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கியதை அடுத்து அவர் தப்பிச்சென்று ஜெர்மனி நாட்டில் தலைமறைவாக உள்ளதாக செய்திகள் வருகின்றன. பெங்களூரு சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்திருந்தார் ரேவண்ணா.
இதற்கிடையில், பிரஜ்வல் உடனடியாக ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்வோம் என்று மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்ததை அடுத்து, முன் ஜாமீன் கோரியுள்ளார் பிரஜ்வல்.
இந்நிலையில், ரேவண்ணா வழக்கில் மீது மேலும் ஒரு புதிய பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளது சிறப்பு புலனாய்வுக்குழு. பாதிக்கப்பட்ட பெண், மாஜிஸ்திரேட் முன்பாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய, சிறப்புக்குழு போலீசார் ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர் சதீஷ் பாபண்ணாவை கைது செய்துள்ளது மைசூரு போலீசார்.
இந்த சூழலில், கர்நாடக மாநில மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரசார் இந்த விகாரத்தை பெரிதாக கொண்டு செல்கின்றனர். மக்களவைத் தேர்தல் நேரத்தில்தான் பிரஜ்வல் விவகாரம் வெளியே வந்திருக்கிறது என்றாலும், இந்த விவகாரம் குறித்து பாஜக தலைமைக்கு முன்பே தெரியும். தெரிந்திருந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று காங்கிரசார் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியே, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகள் குறித்து பாஜகவினரே பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதங்களை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் உள்ளூர் பாஜக தலைவர் தேவராஜ் கவுடா என்பவர், பிரஜ்வல் ரேவண்ணாவின் பென் டிரைவ் முழுவதும் ஆபாச வீடியோக்கள் உள்ளன என்று மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடித்திற்குப் பின்னரும் மோடியும் அமித்ஷாவும் ஏன் பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேட்கிறார் ராகுல்காந்தி.
மேலும், பிரஜ்வல் நடவடிக்கை எடுக்காமல் அவரை வெளிநாடு தப்பிச்செல்ல மோடியும், அமித்ஷாவும் அனுமதித்தது ஏன்? பாலியல் குற்றவாளியை பாதுகாத்து, பெண்களுக்கு அநீதி இழைத்துள்ளதற்காக மோடியும், அமித்ஷாவும் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று பிரச்சாரம் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ராகுல்காந்தி, அந்த கடிதத்தையும் காட்டி பரபரப்பை கூட்டியிருக்கிறார்.
கர்நாடக மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த கடித விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.