
அந்த ஃபைல் அமித்ஷா கைக்கு போன பின்னர்தான் பாஜகவுடனான கூட்டணிக்கு இசைந்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.
ஈஷா நடத்திய சிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்றபோது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அந்த விழாவில் பங்கேற்றிருந்தார்.
விழா முடிந்ததும் ஈஷா ஹெஸ்ட் ஹவுசில் அமித்ஷாவும் வேலுமணியும் 10 நிமிடங்களுக்கு மேல் தனியாக சந்தித்து பேசியிருக்கிறார்கள். அந்த சந்திப்பின் போது அமித்ஷா கேட்ட ஃபைலை கொடுத்திருக்கிறார் வேலுமணி. எடப்பாடிக்கு எதிரான வில்லங்க விபரங்கள் அத்தனையும் அந்த ஃபைலில் உள்ளதாம்.
ஃபைலை அங்கேயே பிரித்துப்படிக்காத அமித்ஷா, அதில் உள்ள விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். அந்த ஃபைலில் உள்ள விபரங்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தால் எடப்பாடியின் எதிர்கால அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுமாம்.

ஃபைலில் உள்ள விபரங்களை கேட்ட பின்னர், ’’கடைசிவரைக்கும் எடப்பாடி கூட்டணிக்கு ஒத்துவரவில்லை என்றால், ஒன்றுபட்ட அதிமுக விவகாரத்திலும் இதற்கு மேலும் முரண்டு பிடித்தால் அவர் இல்லாத அதிமுகவை கொண்டு வந்துவிடுங்கள். அதிமுக முதல்வர் வேட்பாளராக உங்களை அறிவித்துவிடலாம். துணை முதல்வராக ஓபிஎஸ்சை அறிவித்துவிடலாம். கட்சி பொ.செ. வாக சசிகலா இருக்கட்டும். தினகரனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்துவிடலாம்’’என்று டெல்லி போட்டு வைத்திருக்கும் கணக்கை சொல்லி இருக்கிறார் அமித்ஷா.
இதைத்தொடர்ந்து பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அமித்ஷா, ’’வேலுமணி, அதிமுகவை தலைமையேற்று நடத்துவதற்கான வழியைப் பாருங்க. இல்லேன்னா செங்கோட்டையனை முன்னிறுத்தி அதிமுகவை கொண்டு போக என்ன செய்யணுமோ அதைச்செய்யுங்க’’ என்று சொல்லி இருக்கிறார்.

இந்த ரகசிய சந்திப்பும், சந்திப்பில் நடந்த பேச்சுவார்த்தையும் எடப்பாடி காதுக்கும் அப்பவே சென்றிருக்கிறது. அதைக்கேட்டு கொதித்துப்போய் ’’துரோகிகள்’’ என்று பெரிதாக சத்தம் போட்டிருக்கிறார்.
’கோபப்பட்டால் அதிகாரம் போய்விடும். புத்திசாலித்தனமாக அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பாருங்கள். அனுசரிச்சுப்போய் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஆதரவாளர்கள் கொடுத்த ஐடியாவில்தான் ’’எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான்’’ என்று பல்டி அடித்துள்ளார் எடப்பாடி. இத்தனை நாளும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மறுத்து வந்தவர், இப்போது ஆறு மாதம் கழித்துப்பாருங்கள் என்று மழுப்புவதன் மர்மம் இதுதான் என்கிறார்கள்.
அமித்ஷா கைக்கு அந்த ஃபைல் போனதில் இருந்து, எந்த நேரத்தில் என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் உள்ளாராம் எடப்பாடி.