அமித்ஷாவின் அதிகார எழுச்சியின் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகளும் இந்திய அரசியல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு நிறைந்துள்ளதையும் விவரித்து, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல நாளிதழ் The Guardian கட்டுரை வெளியிட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவராகவும், ஆலோசகராகவும் துணை நின்று வரும் அமித்ஷா, இன்று இந்தியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக உருவெடுத்து நாட்டை தீவிர வழிமுறைகளை தேர்வு செய்து மாற்றியமைத்து வருகிறார்.
கடந்த 2005-ம் ஆண்டு நடந்த சொராபுதீன் ஷேக் என்பவர் மீதான போலீஸ் என்கவுண்டர் சம்பவம் அமித்ஷாவின் அரசியல் வாழ்க்கையில் நீடித்த எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
2005-ம் ஆண்டு நவம்பர் மாதம், குஜராத் போலீஸ் அதிகாரிகள் ஒரு பேருந்தை இடைமறித்து, சொராபுதீன் ஷேக் என்பவரையும் அவரது மனைவி கௌசர் என்பவரையும் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் தடுத்து நிறுத்தி அவர்களை அழைத்துச் சென்று, தனி பங்களாக்களில் தங்கவைத்தனர்.
2005 நவம்பர் 26 அன்று சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டதாக பரபரப்பு செய்தி வெளியாகிய நிலையில், அவர் தப்பிச் செல்ல முயன்றதால் தான் துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி என்றும் குஜராத் போலீஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினர். அடுத்த 4 நாட்களில், அவரது மனைவி கௌசருக்கு குஜராத் போலீஸ் அதிகாரிகளால் விஷம் கொடுக்கப்பட்டுக் கொலை செய்து, உடல் நர்மதா நதியில் வீசப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, அந்த கொலைகளில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது பின்னாளில் (2010-ம் ஆண்டில்) சிபிஐ நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அமித்ஷா மீது கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிந்தது. சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவியைக் கொன்ற போலீஸ் அதிகாரிகள் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் செயல்பட்டதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது.
சொராபுதீன் ஷேக் ஒரு தாதா என்பதையும், அவர் பல ஆண்டுகளாக குஜராத் காவல்துறையுடன் ஒத்துழைத்தார் என்றும், அவரின் தேவை இனி இல்லை என்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சிபிஐ தெரிவித்தது.
அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அரசியல் உந்துதலால் சுமத்தப்பட்டதாக அமித்ஷா மறுத்தார். அந்த வழக்கில் கடந்த 2010 ஜூலை 25-ம் தேதி அமித்ஷா கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை முடியும் வரை குஜராத்தில் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் 3 மாதங்கள் கழித்து ஜாமினில் வெளியே வந்தார்.
இந்து தேசியவாதக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அடிவருடிகளாக 1980-களில் தங்களது பயணத்தைத் தொடங்கிய நரேந்திர மோடியும் அமித்ஷாவும் இந்திய அரசியலின் உச்சம் தொட்டுள்ளனர். கட்சியின் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியமானவராக திகழும் அமித்ஷா, மோடியின் வலது கரம் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த சூழலில், 2014-ம் ஆண்டு பாஜக தலமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து அமித்ஷா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ கைவிட்டது. சொராபுதீன் ஷேக் கொலை வழக்கின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறி, விசாரணை நீதிமன்றம் அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தது.
தற்போது இந்தியாவின் உள்துறை அமைச்சராக பணியாற்றும் அமித்ஷா, பாஜகவின் இந்து தேசியவாத சித்தாந்தத்தை விரிவுபடுத்தவும், இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
அமித்ஷாவின் செல்வாக்கால், அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல் உணர்வு, பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாததாக இருந்தாலும், இந்திய ஜனநாயகத்தின் தற்போதைய நிலைகளில் பரவியுள்ளது.
ஒரு உள்ளூர் அரசியல்வாதியிலிருந்து, மோடியுடன் சேர்ந்து நாட்டின் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதராக அமித்ஷா உயர்ந்திருப்பது, இந்திய அரசியல் அமைப்பில் ஆழமான மாற்றங்களையும், வளர்ந்து வரும் சர்வாதிகாரப் போக்கையும் பிரதிபலிப்பதாக, The Guardian கூறியுள்ளது.
அமித்ஷா தனது அரசியல் புத்திசாலித்தனத்திற்கும், கூட்டணிகளை உருவாக்குவதற்கும், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த வேட்பாளர்களை வேட்டையாடுவதற்கும் பெயர் பெற்றவர்.
மோடியின் கேடயமாக பணியாற்றும் அமித்ஷா, செய்தி ஊடகங்களை தனது உறுதியான பிடியுடன் கையாளுகிறார். மோடி பிரதமரான பிறகு இதுவரை ஒரு முறை மட்டுமே செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். 2019-ல் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பில், அப்போதுய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா மோடி சார்பாக அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். தன்னிடம் செய்தியாளர்கள் எழுப்பிய நேரடி கேள்விகள் அனைத்தையும் நகைச்சுவையாக பேசி மோடி அமித்ஷாவிடம் திசை திருப்பினார்.
தொலைக்காட்சி நேர்காணல்களில், அமித்ஷாவின் கடுமையான, உடனடி பதில்கள் அவரின் உறுதியான பிம்பத்தை முன்னிறுத்துகின்றன. பத்திரிக்கையாளர்களை கண்காணிக்க இந்திய அரசாங்கம் இஸ்ரேலிய ஸ்பைவேரைப் பயன்படுத்தியதாக வெளியான செய்தி பரபரப்பைக் கிளப்பி இருந்த நிலையில், அமித்ஷா அனைவரின் ரகசியங்களையும் வைத்திருக்கும் ஒரு மனிதர் என்ற பொதுக் கருத்துக்கும் அது பங்களித்தது.
“அமித்ஷா மக்களை பயமுறுத்துவதை விரும்புகிறவர்”
குஜராத்தில் அமித்ஷாவுடன் நெருங்கி பழகிய பெயர் குறிப்பிடப்பட விரும்பாத ஒருவர், “அமித்ஷா மக்களை பயமுறுத்துவதை விரும்புகிறவர்” என The Guardian நாழிதழிடம் கூறியுள்ளார்.
அமித்ஷா குறித்த இந்தக் கட்டுரைக்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அரசியல் பத்திரிகையாளர்களை அணுகியபோது பலர் கருத்துத் தெரிவிக்க தயங்கி மறுத்தனர். அமித்ஷாவைப் பற்றி விவாதிப்பதில் உள்ள பரவலான பயத்தைப் அது வெளிப்படுத்தியதாக, The Guardian நாளிதழ் கூறியுள்ளது.
அமித்ஷாவைப் பற்றி விவாதிப்பதில் உள்ள சவாலை மேலும் பிரதிபலிக்கும் வகையில், இந்திய நாவலாசிரியரும் ஆர்வலருமான அருந்ததி ராய், “சொல்லத் தகுந்த விஷயங்களைச் சொல்லவோ அல்லது வெளியிடவோ முடியாது” என்று குறிப்பிட்டார். இதே உணர்வை ஒரு மூத்த பாஜக உறுப்பினரும் எதிரொலித்தார்.
இந்திய வரலாற்றின் தற்போதைய சகாப்தம் 2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு தொடங்கியது. அகமதாபாத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இந்துத்துவ கும்பலால் கொல்லப்பட்டனர், குஜராத் காவல்துறை கலவரத்தைத தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. 2004-ம் ஆண்டு பிரிட்டன் அரசின் விசாரணை முடிவில், குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி தான் “நேரடி பொறுப்பு” எனக் கூறியது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குள் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டது.
குஜராத் கலவரத்திற்கு மோடி தான் காரணம் என்கிற தொடர் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாகத் தெரிவித்து வந்த பாஜகவின் முக்கிய தலைவரும் மோடியின் அரசியல் போட்டியாளருமான ‘ஹரேன் பாண்டியா’ கடந்த 2003 மார்ச் மாதம் தனது காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது வரை, ஹரேன் பாண்டியா வழக்கு தீர்க்கப்படாமல் இருந்து வரும் நிலையில், மோடிக்கு எதிரான விமர்சகர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளின் அடையாளமாக அவரது கதை மாறியுள்ளது.
சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மோடியும் அமித்ஷாவும் “ஹரேன் பாண்டியா” மாதிரியான சம்பவத்தை தனக்கு எதிராக செய்யக்கூடும் என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012-ல் சொராபுதீன் ஷேக் கொலை வழக்கு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றி உத்தரவிட்டது. 2014-ல் வழக்கை விசாரிக்கத் தொடங்கிய முதல் நீதிபதி, அமித்ஷாவை ஆஜராக உத்தரவிட்ட நிலையில் அவர் திடீரென மாற்றப்பட்டார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாவது நீதிபதியான பிரிஜ்கோபால் ஹர்கிஷன் எதிர்பாராத விதமாக சர்ச்சைக்குரிய வகையில் உயிர் இழந்தார். அமித்ஷா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தொடங்கிய மூன்றாவது நீதிபதி மூன்று வாரங்களுக்குள் அவருக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சொராபுதீன் ஷேக் கொலை வழக்கை விசாரிக்க இருந்த இரண்டாவது நீதிபதியான பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரணத்தில் இன்று வரை மர்மம் நீடிக்கிறது.
மேலும், 2010-ல் அமித்ஷா கைது செய்யப்பட்ட நேரத்தில், குஜராத்தில் நடந்த சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில், அந்த விசாரணைகளை எப்படி தடுப்பது என்பது குறித்து பேசும் அமித்ஷாவின் கூட்டாளிகளின் உரையாடல்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அமித்ஷாவிற்கு எதிரான பல்வேறு சாட்சியங்களை பட்டியலிட்டு, 2012-ல் ஒரு பிரபல இந்திய இதழின் அட்டைப்படத்தில், “இந்த மனிதன் ஏன் இன்னும் சுதந்திரமாக இருக்கிறான்?” என்கிற தலைப்பில் செய்தி வெளியானது.
அது வெளியாகி 12 ஆண்டுககள் ஆகியுள்ள நிலையில், பாஜக மூத்த அரசியல்வாதியைப் பற்றி இந்தியப் பத்திரிகைகள் அப்படி ஒரு தலைப்பில் மீண்டும் கட்டுரை வெளியிடுமா? என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என The Guardian கூறியுள்ளது.
மோடி ஆட்சியில் நிகழும் ஊடக சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறையை இந்தியா இதுவரை பார்த்ததில்லை. 1975-77ல் இந்திரா காந்தியின் அவசரநிலை பிரகடனத்தின் போது பத்திரிகை சுதந்திரம் தடுக்கப்பட்டது போலல்லாமல், அமைதியான முறையில் இந்த ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிறது.
2019-ல் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலம் தொடங்கியதில் இருந்து, மனித உரிமை அமைப்புகள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவைப் பற்றி கவலைப்படத் தொடங்கியுள்ளன. அனைத்துக் கவலைகளுக்கும் பல வழிகளில் அமித்ஷாவே காரணமாக உள்ளார்.
ஆகஸ்ட் 2019-ல், உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
பாஜகவுக்கு நிதி திரட்ட குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நிறுவனங்களை ஏவி மிரட்டி பணம் பறிக்கும் முறைகளை அமித்ஷா பயன்படுத்தி வந்துள்ளதாக, குற்றம்சாட்டியுள்ள The Guardian நாளிதழ், இந்தியாவில் நியாயமான தேர்தல்களை நடத்தும் செயல்முறையும் தற்போது கேள்விக்குள்ளாகி உள்ளதாக விமர்சித்துள்ளது.
The Guardian Original Article: ‘He likes scaring people’: how Modi’s right-hand man, Amit Shah, runs India
(This article, reported and published by The Guardian, has been translated into Tamil and adapted for Spark Media to provide insight into Amit Shah’s influential role in Indian politics and his impact on the country’s governance)