உத்தரபிரதேசம் மாநிலத்தில் சம்பல் மாவத்தில் முகலாய காலத்தில் கட்டப்பட்ட இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. ஷாஹி ஈத்தா ஜாமா மசூதி எனும் அந்த வழிபாட்டு தலம் முன்னதாக இந்து மத கடவுள் ஹரிஹரன் வழிபாட்டு தலமாக இருந்தது என்றும் ஆகவே அதை மீட்டுத்தர வேண்டும் என்று இந்து அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர். இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தற்போது இஸ்லாமிய வழிபாட்டு தலத்திற்கு சென்று அங்கே ஆய்வு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கே சென்று ஆய்வு செய்தனர். மீண்டும் கடந்த மாதம் 24ம் தேதி ஆய்வு நடத்த சென்றபோது அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
வன்முறையினால் பாதிக்கப்பட்ட சம்பல் மக்களை நேரில் சந்திக்க சென்றார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி. அவருடன் பிரியங்கா, 7 காங்கிரஸ் எம்பிக்கள் டெல்லியில் இருந்து காரில் சம்பலுக்கு சென்றனர். காசியாபாத் எல்லையை நெருங்கியபோது இவர்களின் கார்களை தடுத்து நிறுத்தி, சம்பலுக்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று போலீசார் அனுமதி மறுத்தனர்.
போலீசாரின் துணையுடன் தான் மட்டும் தனியாகன் செல்வதாகவும் சொன்னார் ராகுல். அதற்கும் அனுமதிக்கவில்லை போலீசார்.
இதற்கு ராகுல்காந்தி, ‘’சம்பலுக்குச் செல்லவிடாமல் போலீஸார் எங்களைத் தடுத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அங்கு செல்வது எனது உரிமையும் கடமையும் ஆகும். அப்படி இருக்கும் போது நான் தடுத்து நிறுத்தப்பட்டேன்.
நான் தனியாக செல்ல தயாராக இருக்கிறேன் என்றபோதும் அதற்கும் சம்மதிக்கவில்லை. இது அரசியலமைப்புக்கு எதிரானது.
பாஜக ஏன் அஞ்சுகிறது? தோல்விகளை மறைக்க காவல்துறையை ஏன் ஏவுகிறது? சத்தியம் மற்றும் சகோதரத்துவத்தின் செயலை பாஜக ஏன் அடக்குகிறது?’’ என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.