கரூர் சம்பவ வழக்கில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோரிடம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்திய டெல்லி சிபிஐ அதிகாரிகள் அடுத்ததாக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்படி இன்று தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய் அங்கே சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்துள்ளது. நாளை மீண்டும் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டியதிருப்பதால் டெல்லியிலேயே தங்கி இருக்கிறார்.
விஜயிடம் தொடர்ந்து 5 நாட்கள் வரையிலும் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாகத் தெரிகிறது.
ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோரின் வாக்குமூலங்களை வைத்தே முதல் நாள் விசாரணை நடந்திருப்பதாக தகவல்.

விஜயிடமும் இந்த கேள்விகளை சிபிஐ முன்வைக்கும் என்று தெரிகிறது. வேலுச்சாமிபுரத்திற்கு நண்பகல் 12 மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ஏன் இரவு 7 மணிக்கு வந்தீர்கள்? வேலாயுதம்பாளையம் தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்தது ஏன்? அனுமதி இல்லாமல் ரோட் ஷோ பல்வேறு இடங்களில் நடத்தி பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியது ஏன்? கூட்டத்தில் அசாதாரண சூழல் நிலவுவதை உணர்ந்து தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகனிடமும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும், இணைச்செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமாரிடம், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிட காவல்துறை கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் வேலுச்சாமிபுரம் ஜங்சனில் ஏன் வாகனத்தை நிறுத்தி காலதாமதம் செய்தீர்கள்?உள்ளிட்ட கேள்விகள் விஜயிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
ஆனந்தும், ஆதவ் அர்ஜூனாவும் அளித்த வாக்குமூலங்கள் விஜயை சிக்க வைத்திருப்பதாகவே சொல்கின்றன டெல்லி தகவல்கள்.
