வெறும் 500 ரூபாயுடன் பிழைப்பு தேடி இந்தியாவுக்கு வந்தவர் திருபாய் அம்பானி. இன்று அவரது பேரன் ஆனந்த் அம்பானி 5000 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்திருக்கிறார். ஏழைக்குடும்பத்தில் பிறந்த முகேஷ் அம்பானி, தனது மகன் திருமணத்தை இத்தனை ஆயிரம் ரூபாய் செலவில் நடத்தி உலகம் வியக்கச் செய்திருக்கிறார்.
இளவரசர் பிரின்ஸ், டயானாவின் திருமணச்செலவு கூட 1500 கோடி ரூபாய்தான் என்கிறார்கள்.
ஏமன் நாட்டில் வசித்த ஏழைக் குடும்பம்தான் திருபாய் அம்பானி குடும்பம். எரிவாயு நிலையத்தில் வேலை செய்து வந்த திருபாய் அம்பானிக்கு முகேஷ் அம்பானி பிறந்தார். அவர் பிறந்த ஒரு வருடத்தில் கையில் இருந்த 500 ரூபாய் பணத்துடன் இந்தியாவுக்கு பிழைப்பு தேடி வந்தார் திருபாய் அம்பானி. இவருக்கு முகேஷ் அம்பானி, அனில் அம்பானி என்ற மகன்களும், தீப்தீ சல்கோன்கர், நீனா கோத்தாரி என்ற மகள்கள் பிறந்தனர்.
குடிசை முதல் கோபுரம் வரை:
மும்பையில் ஒரு சிறிய குடியிருப்பில் வசித்தபடியே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஜவுளித்தொழிலை தொடங்கினார் திருபாய் அம்பானி. 1970 வரைக்கும் மும்பையில் புலீஸ்வரரில் இரண்டு படுக்கை அறை குடியிருப்பில் வசித்து வந்த திருபாய், பின்னர் கொலாபாவில் 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். அவர் போட்ட பாதையில் மட்டும் அல்லாமல் புதிய புதிய பாதைகளை அமைத்து வெற்றி நடைபோடுகிறார் அவரது மூத்த மகன் முகேஷ் அம்பானி. உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
மும்பையில் இரண்டு படுக்கை அறைகளுடன் வசித்த குடும்பத்தில் வளர்ந்த முகேஷ் அம்பானி, இன்று அதே மும்பையில் வாழும் ஆடம்பர மாளிகை 8,350 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது. 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வகையில் 4 லட்சம் சதுர அடியில் 27 மாடிகளுடன் அமைந்துள்ளது அந்த மாளிகை. இதில் 168 கார்கள் நிறுத்தும் அளவுக்கு கேரேஜ்கள் உள்ளன. 3 ஹெலிபேட் தள வசதிகள் உள்ளன. தியேட்டர், ஸ்பா, செயற்கை முறையில் பனியினை உருவாக்கும் அறை என்று ஆடம்பர வசதிகளை கொண்ட இந்த மாளிகையை பராமரிப்பதற்காக 600 பணியாட்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
10 லட்சத்து 28 ஆயிரத்து 544 கோடி சொத்துக்கு அதிபதி முகேஷ் அம்பானி. இவர் தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை உலகம் வியக்க நடத்தி முடித்திருக்கிறார். தன் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கோலாகலமாக நடந்தது அந்த திருமணம். இந்தியா மட்டுமல்லாது பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பர்க், ரிஹானா உள்ளிட்ட உலகில் பல்வேறு துறையினரும் இந்த திருமண விழாவில் பங்கேற்று விழிவிரியச் செய்தனர்.
பாப் பாடகி ரிஹானாவின் ஒருநாள் இசைக்கச்சேரிக்கு மட்டும் 70 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு 84 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். இதை எல்லாம் பார்த்து இத்தனை ஆடம்பரமாக தன் மகன் திருமணத்தை நடத்தி இருக்கிறார் முகேஷ் அம்பானி என்று ஒரு பக்கம் விமர்சனம் இருக்கிறது. ஆனால், சராசரியாக ஒரு இந்திய குடும்பம் திருமணத்திற்காக செலவழிப்பதை விட, அதாவது சராசரியாக ஒரு குடும்பம் தங்களது மொத்த வருவாயில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரையிலும் செலவு செய்கிறார்கள். அப்படி பார்க்கும்போது தனது மொத்த வருவாயில் 0.5% மட்டுமே திருமணச்செலவு செய்திருக்கிறார் முகேஷ் அம்பானி என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
மூன்று வாரிசுகள்:
முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதிக்கு மூன்று குழந்தைகள். ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி. இதில் கடைக்குட்டி ஆனந்த் அம்பானி. ஆகாஷ் அம்பானியும், இஷா அம்பானியும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் இயக்குநர்கள். ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்சின் இயக்குநராக உள்ளார் ஆனந்த் அம்பானி.
ஆகாஷ் திருமண அழைப்பிதழ் ரூ.1 லட்சம்
ஆகாஷ் அம்பானிக்கும் இஷா அம்பானிக்கும் திருமணம் நடந்துள்ளது. தன்னுடன் படித்த பள்ளித்தோழி ஷ்லோகா மேத்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆகாஷ். கடந்த 2019ம் ஆண்டில் மார்ச் 9ம் தேதி அன்று இந்த திருமணம் நடந்தது. 2018ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவரின் திருமணத்திலும் இந்திய மற்றும் உலக பிரபலங்கள் பங்கேற்றனர். ஆனந்த் அம்பானி திருமண அழைப்பிதழ் போலவே ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழும் பெட்டி வடிவில் இருந்தது. ஒரு அழைப்பிதழ் தயாரிக்க ஒரு லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும் என்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஷாவின் திருமண அழைப்பிதழ் ரூ.3 லட்சம் –ஆசியாவிலேயே பெரிய திருமணம்
2018ல் நடந்த இஷா அம்பானியின் திருமணம், ஆசியாவிலேயே பிரம்மாண்ட திருமணம் என்று பேசப்பட்டது. இஷாவின் திருமண அழைப்பிதழே 3 லட்சம் ரூபாய் என்கிறார்கள். இஷாவின் திருமணத்திற்காக 100 தனியார் விமானங்கள் புக் செய்யப்பட்டிருந்தன. இஷாவின் திருமண செலவு 100 மில்லியன் டாலர் என்று சொல்லப்படுகிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானாவின் திருமண செலவு 110 மில்லியன் டாலர் என்று இருந்த நிலையில், அதை நெருங்கும் வகையில் 100 மில்லியன் டாலர் செலவில் இஷாவின் திருமணம் நடந்ததால் ஆசியாவிலேயே பெரிய திருமணம் என்று அப்போது பேசப்பட்டது.
சார்லஸ் – டயானா திருமண செலவுக்கு நெருக்கத்தில் இருந்தது இஷாவின் திருமண செலவு. ஆனால், சார்லஸ் -டயானா திருமண செலவை காட்டிலும் பல மடங்கு அதிகரித்துவிட்டது ஆனந்த் அம்பானியின் திருமண செலவு.
ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி மூன்று பேரின் திருமணங்களுமே பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தாலும் ஆனந்த் அம்பானியின் திருமணம் மட்டும் பெரிய அளவில் பேசப்படுகிறதே ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடைக்குட்டிக்கு எப்போதும் தனிக்கவனிப்பு இருக்கத்தானே செய்யும்.
இப்படி ஒரு விமர்சனங்கள் எழுவதால்தானோ என்னவோ தெரியவில்லை, ‘’தனது அண்ணன் ராமன் என்றும் அக்கா ஒரு தெய்வீகத்தாய் என்றும் சொல்லும் ஆனந்த் அம்பானி, எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை; எந்த வித்தியாசமும் இல்லை. எங்கள் மூவரும் பெவி குயிக் மூலம் ஒட்டிக்கொண்டது மாதிரி உள்ளோம்’’என்று சொல்லி நெகிழ்கிறார் ஆனந்த் அம்பானி.