அமித்ஷாவின் பேச்சுக்கு மாறாக பேசி தேசிய ஜனநாயக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அன்புமணி.
அமித்ஷாவின் தமிழக வருகையின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்கும் கட்சிகள் இறுதி செய்யப்படும் என்ற திட்டம் இருந்தது. எடப்பாடியின் பிடிவாதத்தால் அது நடந்தேறாமல் போனது. இதில் அதிருப்தி அடைந்த அமித்ஷா, எடப்பாடியை சந்திப்பதையே தவிர்த்தார். ஆனாலும் கூட்டணி குறித்து பேச வேலுமணியை அழைத்து இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினார். கூட்டணியை இறுதி செய்துவிட்டு டெல்லி வரவேண்டும் என்று கட்டளை இட்டுச் சென்றுவிட்டார் அமித்ஷா.

இதனால் கூட்டணியில் இணையும் கட்சிகளை இணைக்க வேகம் காட்டுகிறார் எடப்பாடி. அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைத்துப்பேசி அன்புமணி தலைமையிலான பாமகவை கூட்டணிக்குள் உறுதி செய்திருக்கிறார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ‘’அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருக்கிறது. எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எல்லாம் அவர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கின்றோம். இது வலுவான கூட்டணி. ’அண்ணா திமுக தலைமையிலான கூட்டணி’ வென்று ‘ ’அதிமுக ஆட்சி’ அமைக்கும்’’ என்றார்.

தனது எக்ஸ் தளத்திலும் கூட, ‘’வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதென முடிவு செய்து, கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமியை, பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தோம்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

தற்போது தமிழகம் வந்த போது மட்டும் அல்லாமல், கூட்டணியின் தொடக்கத்தில் இருந்தே 2026ல் தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி மலரும் என்று சொல்லி வருகிறார். என்.டி.ஏ. தலைமையிலான கூட்டணி என்று சொல்லி வருகிறார். ஆனால் இன்று அன்புமணியோ, ’அண்ணா திமுக தலைமையிலான கூட்டணி’ வென்று ‘ ’அதிமுக ஆட்சி’ அமைக்கும்’’ என்றார். இது பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
