சரியாகிவிட்டது என்று ராமதாஸ் சொன்னாலும் சரி செய்ய முடியாத அளவிற்கே போய்க் கொண்டிருக்கிறது பாமக உட்கட்சி விவகாரம்.
பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராம் வரக்கூடாது என்று அன்புமணி பிடிவாதம் காட்ட, தான் எடுத்த முடிவுக்கு மறுத்து பேசுவதா? என்று ஆத்திரம் கொண்ட ராமதாஸ், பொதுக்குழு முடிந்த மறுநாளே முகுந்தன் பரசுராம்தான் இளைஞரணி தலைவர் என்று நியமன கடிதமும் கொடுத்து உறுதி செய்துவிட்டார்.
இதனால் சிறப்பு பொதுக்குழுவில் அறிவித்தபடியே பனையூரில் தனி அலுவலகம் தொடங்கி அங்கே மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் அன்புமணி. இன்றுடன் மூன்றாவது நாளாக ஆலோசனை நடந்து வருகிறது.
கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் சீனியர்கள் பலரும் இந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என்று சொல்லி சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு தனக்கு கேண்டிய இளைஞர்களையே மா.செக்களாக மாற்றி இருக்கிறார் அன்புமணி. இதனால் கட்சியில் அவருக்கு 80 சதவிகித ஆதரவு மா.செக்கள் உள்ளனர். அப்படி இருந்தும் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவும், சேர்க்கவும் ஆக உள்ள அதிகாரம் ராமதாசுக்குத்தான் உள்ளது என்பதால், கட்சியின் நிறுவனரிடம் உள்ள அந்த அதிகாரத்தை தலைவர் பதவிக்கு மாற்ற விதிகளில் திருத்தம் கொண்டு வர அன்புமணி ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக சொல்கிறது பனையூர் வட்டாரம்.
தன் முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கட்சியை விட்டே வெளியே போக வேண்டியதுதான் என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்ததால் அந்த நேரத்தில் வேறொன்றும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்து விட்டார் அன்புமணி. அதனால்தான் அந்த அதிகாரத்தை பறிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம்.
மா.செக்களின் முழுமையான ஆதரவை பெற்று, கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் உள்ளார் ராமதாஸ்.
பொதுக்குழுவில் முட்டல் மோதல் வந்தாலும் மறுநாள் அமைதியாக வந்து சமாதானம் பேசிவிட்டு சென்ற அன்புமணி, அடுத்தடுத்து எடுத்து வைக்கும் அதிரடி அடிகளால் மிரட்சியில் இருக்கிறார் ராமதாஸ்.
கட்சி முழுமையாக அன்புமணி வசம் சென்றுவிட்டால் நிர்வாகிகளின் கவலை உறுதியாகிவிடும். அவர்கள் கவலைப்படுவது மாதிரியே பாமகவை பாஜக மயம் ஆக்கிவிடுவார் அன்புமணி. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கட்சியை பழைய நிலைக்கு கொண்டு வர துடிக்கிறார் ராமதாஸ்.
இந்த களேபரத்தில் தகித்துக்கிடக்கிறது தைலாபுரமும் பனையூரும்.