
2015க்கு பிறகு ‘’பாமக ஆட்சிக்கு வர வேண்டும்’’ என்று ராமதாசும், அன்புமணியும் மீண்டும் உரக்க குரல் எழுப்பி வருகிறார்கள்.
‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற வாசகத்தை சொல்லாவிட்டாலும் வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாட்டில் அன்புமணியின் பேச்சு அதைத்தான் உணர்த்துகிறது.
தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயம்தான் பெரிய சமுதாயம். வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு ஓட்டு போட்டால் பாமக ஆட்சிக்கு வந்துவிடும். இதை செய்யுங்கள் என்று ராமதாஸ் பல காலமாக சொல்லி வருகிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்று ’மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற வாசகங்களுடன் அன்புமணி இருக்கும் போஸ்டர் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. நாளிதழ்களிலும் அந்த விளம்பரம் வெளியாகின.

மாற்றம் என்று சொல்லும் இவர்கள் அந்த வாசகத்தை கூட காப்பி அடிக்கிறார்களே என்று அந்த ஒரிஜினல் விளம்பரமான ஒபாமாவின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அன்புமணி முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இப்போது விஜய் கட்சியில் இருக்கும் ஜான் ஆரோக்கியசாமிதான் அப்போது பாமகவுக்கு வேலை செய்தார். பாமக மாநாட்டை ஹைடெக்காக நடத்தி அதில் அன்புமணியை சிறப்பாக பேச வைத்து பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். தேர்தலில் வெற்றிதான் கைகூடவில்லை
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற நோக்கிலேயே சித்திரை முழுநிலவு மாநாட்டில் பேசினார் அன்புமணி. அதனால்தான் தனது பேச்சில் பாமக மற்றும் வன்னியர் சமூகத்தின் சிறப்புகளை அடுக்கினார்.
’’வன்னியர் சமுதாயம் தனிப்பெரும் சமுதாயம். ஆனால் இந்த சமுதாயத்தை கட்சிகள் எல்லாம் வெறும் வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மற்ற சமுதாயமும் தங்களுக்கு பிரச்சனை என்றால் நம்மை அணுகுவார்கள். நாமும் சென்று பிரச்சனையை தீர்த்து வைத்து 30,40 வழக்குகளை வாங்கிக்கொள்வோம். ஆனால் தேர்தல் வந்தால் டாடா காட்டி நம்மை அனுப்பி விடுவார்கள்.

வரும் காலம் நம் காலம். தம்பி , தங்கைகள் எல்லாம் யார் யாரையோ நம்பி போறீங்க. அவுங்க பின்னாடி எல்லாம் போகாதீங்க. என் பின்னால் வாங்க. இந்த அண்ணன் பின்னால் வாங்க. உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மாவீரன் குருவைப் போல் நான் உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாம் ஆள வேண்டும். ஆளுகின்ற காலம் வந்துவிட்டது. நாம் ஆள வேண்டும் என்பது காடுவெட்டி குருவின் கனவு. வரும் காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றாக இணைவோம். உங்களை முன்னேற்றுவது இந்த அன்புமணியின் கடமை.
இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். ஆனால் நம் கோவணத்தை பிடிங்கிக்கொண்டு வடமாநில இளைஞர்களை குடிகாரர்களாக ஆக்கிவிட்டார்கள். 109 காவல்துறை உயரதிகாரிகளில் ஒரே ஒரு வன்னியர்தான் உள்ளார். தமிழ்நாட்டில் 326 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இதில் 14 பேர்தான் வன்னியர்கள். இது எவ்வளவு பெரிய சமூக அநீதி.
ஆனால், இந்த சமுதாயம் (வன்னியர்கள்) இல்லை என்றால் தமிழ்நாட்டில் மக்கள் வாழ முடியாது. சேற்றுல நின்னு சோறு போடுறது இந்த சமுதாயம்தான். வீடு கட்டிக்கொடுக்குறது இந்த சமுதாயம்தான். ஹாய் ஆக காருல போக ரோடு போடுறது இந்த சமுதாயம்தான். உங்கள் மானத்தை காப்பாற்றும் ஆடைக்கான பருத்தியை விளைவிக்கிறது இந்த சமுதாயம்தான். இப்பேர்பட்ட பெரிய சமுதாயம் இன்றைக்கு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிக் கிடக்கிறது. காரணம், படிப்பு , வேலை கிடையாது. இதை உருவாக்குங்கள் என்றுதான் 45 ஆண்டுகாலமாக அய்யா கெஞ்சிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு காலமாக எங்களை கெஞ்ச வைப்பீங்க?

தமிழ்நாட்டை சிங்கப்பூருக்கு நிகராக மாற்ற எங்களால் மட்டும்தான் முடியும். வேறு யாராலும் அது முடியாது. அவர்களுக்கு தெரியாது. இரவு 2 மணிக்கு என்னை எழுப்பி கேட்டாலும் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளையும் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வையும் என்னால் சொல்ல முடியும். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழக மக்களே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்”என்று எழுச்சி பொங்கப் பேசிய அன்புமணி,
’’மாநாடு முடிந்து அனைவரும் அமைதியாக, பாதுகாப்பாக திரும்புங்கள். மற்ற தலைவர்களைப் போல் நான் அத்துமீறு என்று சொல்ல மாட்டேன். நீ அமைதியாக இரு. எந்த பிரச்சனையும் செய்யாமல் வீடு போய் சேரு. என் தம்பியோ தங்கையோ ஒரு வழக்கு கூட வாங்கக்கூடாது. பத்திரமாகப் போ. படி, வேலைக்கு போ, அப்புறம் கட்சி வேலைகளைப் பாரு. இனமே எழு! உரிமை பெறு!’’ என்று கட்சித் தொண்டர்களிடம் அக்கறையோடு சொன்னார்.