மருத்துவ பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலையில் கார்டியா ஆஞ்சியோ கிராம் செய்யப்பட்டுள்ளது. இதில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து அன்புமணி, மருத்துவமனை சென்று அங்கே ராமதாசுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை சந்தித்து பேசி உள்ளார்.
ராமதாஸ் தற்போது ஐசியு பிரிவில் இருப்பதால், 6 மணி நேரத்திற்கு பின்னர்தான் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்பதால் அன்புமணியால் ராமதாசை சந்திக்க முடியவில்லை.

மருத்துவ பரிசோதனையில் ராமதாஸ் நலமுடன் இருப்பதாகவும், இரண்டு நாள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் அன்புமணி.
ராமதாசின் உடல்நிலை குறித்து அவரது ஆதரவாளரும், எம்.எல்.ஏவுமான அருள், ’’ராமதாசுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு தலைவன் உடல்நலத்தில் எவ்வளவு அக்கறையுன் இருக்க வேண்டும் என்பதற்கு தானே ஒரு உதாரணமாக இருக்கிறார் ராமதாஸ்.

ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தவர்கள் தினமும் 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். 87 வயது ஆனாலும் இதை தினமும் செய்து வருகிறார் ராமதாஸ். யோகா செய்கிறார். நீச்சல் பயற்சி செய்கிறார். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அப்பல்லோ சென்று பரிசோதனை செய்துகொள்வது ராமதாசின் வழக்கம். மற்றபடி ராமதாசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வதந்திகளை நம்ம வேண்டாம். 100 % ஆரோக்கியத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வார் அவர்’’ என்கிறார்.
ஐசியு வார்டில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை என்று அன்புமணி கூறியிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.மணி உள்ளிட்டோர் ராமதாசை சந்தித்துள்ளனர். அன்புமணியுடனான மோதலால் அவரின் சந்திப்பை ராமதாஸ் தவிர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.
