
அநாகரிகமாக தன் கழுத்தில் மாலை போட்ட கூல் சுரேஷின் கன்னம் பழுக்க அன்றே ஒரு அறை விட்டிருந்தால் ஸ்லீவ்லெஸ் உடையில் வந்த தன்னை அந்த பத்திரிகையாளர் விமர்சித்திருக்க மாட்டார் என்று ஆவேசப்பட்டார் தொகுப்பாளினி ஐஸ்வர்யா.
அம்பி படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பினை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா, வெயில் காலத்தில் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும், எப்படி எல்லாம் உடல்நலனை காக்க வேண்டும் என்று வகுப்பெடுத்தார்.
இது சில பத்திரிகையாளர்களுக்கு எரிச்சலூட்டியது. அந்த எரிச்சலை தொகுப்பாளினியின் ஆடை மீது காட்டினார் பத்திரிகையாளர் மீரான் முகமது.
வெயில் காலத்திற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐஸ்வர்யா அறிவுறுத்தியதால், நீங்க போட்டிருக்கிற டிரெஸ்ஸும் வெயில் காலத்துக்கு ஏத்ததா? என்று கேட்க, பதில் சொல்லாமல் இருந்தார் ஐஸ்வர்யா.
பின்னர் ஐஸ்வர்யா, ‘’இங்கு நடப்பது ‘அம்பி’ படத்தின் பிரஸ்மீட். நீங்கள் வேறு எதையோ பேசுகிறீர்கள்?’’ என்றார்.

அதற்கு மீரான், ‘’நீங்களும் படத்தை தாண்டி ‘வெயில் கிளாஸ்’ எடுத்ததால்தான் நானும் இதை கேட்கிறேன். உங்கள் உடை தவறு என்று நான் சொல்லவே இல்லை. இது வெயில் காலத்திற்கு ஏற்றதா? இல்லையா? என்பதுதான் என் கேள்வி’’ என்று கேட்டார்.
அதற்கு ஐஸ்வர்யா, ‘’இதற்கு எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை’’ என்றார்.
ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்ததால் ஒரு பெண்ணை, அதுவும் அழகாக தமிழ் பேசும் ஒரு பெண்ணை இப்படி கிண்டல் செய்கிறார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
அந்த நிருபர் யார் எனத் தெரியாமலேயே கண்டனம் வந்த நிலையில், அந்த நிருபரே தனது வலைத்தளத்தில் நடந்தது என்ன என்பது பற்றி விரிவாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுடன் தொகுப்பாளினியின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இதனால் பதிலுக்கு அந்த நிருபரின் புகைப்படத்தையும் பலர் பகிர்ந்தனர்.
வெயிலுக்கு ஏத்த ஆடையா? என்று கேட்டதற்கே கண்டனங்கள் பறந்து வந்த நிலையில், ’’எனது கேள்வியை ஏதோ பெண் சமூகத்திற்கு எதிரானது போலவும், பெண்களின் உடை உரிமையை கேலி செய்யும் கேள்வி போலவும், ஆபாசமான கேள்வி போலவும் சித்தரித்து, ’’மூத்த நிருபரின் ஆபாச கேள்வி, பதிலடி கொடுத்த தொகுப்பாளினி’’என தலைப்பு வைத்து சமூக வலைத்தளங்கில் அந்த தொகுப்பாளினியின் முன்னழகு, பின்னழகை குளோஸ்-அப்பில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தொகுப்பாளினியின் முன்னழகு, பின்னழகை குளோஸ்-அப்பில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னது மேலும் பலருக்கு ஆத்திரமூட்டியது. அதற்கும் சேர்த்து கண்டனங்கள் பறந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று யோகிடா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அந்த நிகழ்வை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா, கூல் சுரேஷ், மீரான் முகமது செய்த செயல்களுக்கு அந்த மேடையில் பதிலடி கொடுத்தார்.
’’வந்திருக்காங்களா லாஸ்ட் டைம் என்னை கொஸ்டீன் கேட்ட அந்த சார். நான் ஈவெண்ட் முடிச்சுட்டு அந்த சாரை தேடினேன். அவர் அதற்குள் போயிட்டார். நான் அணிஞ்சிருந்தது சம்மருக்கான டிரெஷ்சான்னு கேட்டிருந்தார். அதாவது சம்மருக்கு இதுமாதிரி ஸ்லீவ்லெஸ் டிரெஸ் போட்டுக்கிட்டு காத்து வாங்கிக்கிட்டு வந்திருக்கியாம்மா? ங்கிறதுதான் நீங்க கேட்ட கேள்விக்கான பொருள்னு எனக்கு அஞ்சு செகண்ட்லயே புரிஞ்சது. அந்த இடத்துல கோபப்படுறதா? தொகுப்பாளினியா மேடை நாகரீகம் கருதி அமைதியா அந்த இடத்துல நிக்குறதான்னு குழப்பத்துலயே கடந்து போயிட்டேன்.
அதுக்கப்பறம் வெளிய வந்து உங்கள தேடுனேன். நீங்க இல்ல. நான் உங்களுக்கு அப்ப சரியா பதில் சொல்லலேண்ணாலும் மக்கள் உங்களுக்கு சரியா பதில் சொல்லிட்டாங்க.

அதுக்கப்பறமும் அத ஏத்துக்கக்கூடிய மனநிலை உங்களுக்கு இல்லேங்கிறது உங்க பேஸ்புக் பக்கத்தை பார்க்கும்போதே புரிஞ்சது. அந்த கேள்விய நியாயப்படுத்தி அபத்தமான விளக்கம் கொடுக்குறீங்க.
பல மேடைகளில் வெற்று விளம்பரத்துக்காக கோமாளித்தனம் செய்யக்கூடிய ஒரு நடிகர் ( கூல் சுரேஷ்) என் கழுத்துல மாலை போட ட்ரை பண்ண அப்பவே எல்லோரும் சொன்ன மாதிரி போலீஸ் புகார் கொடுத்து அவர ஜெயில்ல வச்சிருந்தாலோ, அந்த நடிகரின் கன்னத்தை அந்த மேடையிலேயே பழுக்க வச்சிருந்தாலோ இது இங்க வரைக்கும் வந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.
அமைதியாவே இருக்குறதால நான் ரொம்ப பலவீனமாள்னு நினைச்சிட்டு இந்த மாதிரியான ஆண்கள் அவுங்க பலத்தை என்கிட்ட காட்டுறாங்க. இனிமே இது மாதிரி பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்’’ என்று எச்சரித்தார்.
அத்தோடு விடாம, அந்த பத்திரிகையாளர் பணி ஓய்வு பெறும் வயதில் உள்ளார் என்று சொல்லிவிட்டு, ஓய்வுகாலத்தை எப்படி கழிக்க வேண்டும் என்று பாடமெடுத்து மற்ற பத்திரிகையாளர்களை வெறுப்பேற்றினார்.
கடைசியாக நபிகள் நாயகன் சொன்ன ஒன்றை சொல்லி முடிக்கிறேன் என்று சொன்னபோது, பொறுமையிழந்த பத்திரிகையாளர்கள், ’’போதும் போம்மா’’ என்று உரக்க குரல் எழுப்பினர்.