ஆந்திர மாநிலம்(Andhrapradesh) கர்னூல் மாவட்டம் சின்னதேகுரு அருகே ஹைதராபாத்-பெங்களூரு பாதையில் சென்ற தனியார் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்ததில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 பேர் பயணம் செய்த நிலையில், பேருந்தின் அடியில் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதால் எரிபொருள் தொட்டி வெடித்து தீ பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் அவசரகால கதவு வழியாக தப்பிய நிலையில், 18 பேருக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேருந்து V Kaveri Travels நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட DD 01 N 9490 எனும் பதிவு எண் கொண்ட இந்த ஸ்கேனியா பேருந்து முதலில் மே 2, 2018 அன்று வாங்கப்பட்டு, தொடர்ந்து ஆகஸ்ட் 8, 2018 அன்று டாமன் மற்றும் டையூவில் பதிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் ஏப்ரல் 29, 2025 அன்று ராயகடா RTO-வில் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்துக்கு செல்லுபடியாகும் சுற்றுலா அனுமதி, உடற்தகுதி சான்றிதழ், சாலை வரி மற்றும் காப்பீட்டுச் சான்றிதழ்கள் இருந்துள்ளன. ஒடிசா அதிகாரிகள் வழங்கிய அடிப்படை சுற்றுலா அனுமதி ஏப்ரல் 30, 2030 வரை, அகில இந்திய சுற்றுலா அனுமதி ஜூலை 31, 2026 வரை, உடற்தகுதி சான்றிதழ் மார்ச் 31, 2027 வரை, காப்பீடு ஏப்ரல் 20, 2026 வரை செல்லுபடியாகும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

அத்துடன், போக்குவரத்து விதிமீறல் பதிவுகளும் பேருந்துக்கு இருந்துள்ளன. தெலுங்கானா போக்குவரத்துத் துறை தகவலின்படி, வேகக்கட்டுப்பாடு மீறல், தவறான பாதையில் ஓட்டுதல், சாலையை மறித்தல் போன்ற 16 விதிமீறல்களுக்கு மொத்தம் ரூ.23,120 மதிப்பிலான e-challan அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
தீ விபத்து (Fire Accident) ஏற்பட்டதற்கான காரணமாக, மோட்டார் சைக்கிள் மோதியதில் battery பகுதியில் ஏற்பட்ட பிணக்கு fuel tank-ஐ எரிய வைத்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விபத்து தொடர்பான அனைத்து கோணங்களும் ஆய்வு செய்யப்படுவதாக, மேலும் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆந்திரப் பிரதேச போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னா தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேருந்து தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள்” என்று சந்திரபாபு நாயுடு எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், இவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றன. மேலும் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அஞ்சப்படுகின்றது.
இந்த சம்பவம் பேருந்தில் பயணம் செய்யும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
