சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை படிப்பினையாக எடுத்துக்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முட்புதர்கள் அகற்றப்பட்டு மின் விளக்குகள் எரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நேரம் தவிர ஏனைய நேரங்களில் அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ’’எந்த ஒரு மாணவரும், மாணவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார் முதலமைச்சர். அதனால், ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பெண்களுக்குரிய பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. புகார்கள் வந்தால் இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் விசாரிப்பார்கள்.
மாணவர், மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களுக்கு தாங்களாகவே முன் வந்தும் இந்தக் குழு உதவி செய்யும். கவுன்சிலிங் கொடுக்கும்.
அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தினை சிலர் அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழக விவகாரம் என்பதாலும், மாணவியின் நலன் குறித்த விவகாரம் என்பதாலும், சட்டத்தின் படி குற்றவாளியை கைது செய்து விசாரணை நடந்து வரும் நிலையில், பல்கலைக்கழகம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறது.
துறையின் அமைச்சர் என்கிற முறையில் காவல்துறையின் நடவடிக்கைக்கு நானும் முழு ஒத்துழைப்பு தருகிறேன். தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தரும்.
இந்த நிலையில், ஒன்றும் கிடைக்காதவர்கள் செய்கிற அரசியல் தேடலுக்கு, அரசியல் தீனிக்கு மாணவியின் பிரச்சனையை இரையாக்க அரசு விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.