தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று தலைமை முடிவெடுத்த பின்னரே வெளிநாட்டுக்கு படிக்கப்போவதாக சொன்னார் அண்ணாமலை என்கிறது கமலாலய வட்டாரம். உட்கட்சி பூசல் வலுத்ததாலும் தனக்கு எதிராக நிர்வாகிகள் திரண்டு நிற்பதாலும் தானே ஒதுங்கிக்கொள்ள நினைத்துவிட்டார் அண்ணாமலை என்றும் அந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது.
உட்கட்சிப்பூசலில் பதிலுக்குப் பதில் வாதம் வலுத்து, வெளி இடங்களில் பேட்டி கொடுக்கும் போதும் அது வெளிப்பட்டதால், தலைமை வாய்ப்பூட்டு போட்டுவிட்டதால், செத்தாலும் இனி ஏர்ப்போட்டில் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று ஆவேசப்பட்டார் அண்ணாமலை.
இப்போது அடுத்த தலைவர் யார் என்பதையும் தலைமை உறுதி செய்திருக்கிறது. இதையடுத்து அண்ணாமலையும் அவசர அவசரமாக டெல்லி சென்று தன்னை தமிழக பாஜக தலைவராக உட்கார வைத்த பி.எல்.சந்தோஷிடம், தன்னை எப்படியாவது ஒன்றிய அமைச்சராக்கி விடுங்கள். அப்போதுதான் இத்தனை நாளும் தமிழ்நாட்டில் செய்த அரசியலுக்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.
அண்ணாமலை கேட்டுக்கொண்டபடியே அவரும் தலைமையிடம் பேசிப்பார்த்திருக்கிறார். ஆனால், தலைமையோ அதற்கு செவிசாய்க்கவே இல்லையாம்.