திருமாவளவன், சீமான், அண்ணாமலை, விஜய் உள்ளிட்ட கட்சித்தலைவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு திடிர் கட்டளை போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
வலுவான கூட்டணி அமைத்தே ஆகவேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கிறது அதிமுக. பாஜகவும் இதே நிர்பந்தத்தில்தான் இருக்கிறது. கூட்டணி அமைத்து துணை முதல்வர் ஆகிவிட வேண்டும் என்கிற வேட்கையில் இருக்கிறார் விஜய். இதனால் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்பதால் திமுகவைத் தவிர மற்ற கட்சி தலைவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று கட்டளை போட்டிருக்கிறார் எடப்பாடி.
கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக ஊழல் கட்சி என்று கடுமையாக விமர்சித்து வந்தார் அண்ணாமலை. அதிமுகவின் தயவில் தேர்தலில் சில எம்.எல்.ஏக்களை பெற்றுக்கொண்டு, பாஜகவின் தயவில்தான் அதிமுக உள்ளது என்று கடுமையாக விமர்சித்து வந்தார் அண்ணாமலை. இதனால் எரிச்சல் அடைந்த எடப்பாடி, உங்க சகவாசமே வேண்டாம் என்று பாஜகவை உதறித்தள்ளிவிட்டார்.
ஆனாலும் அதிமுகவின் தயவை விரும்புகிறது பாஜக தலைமை. இதற்கு இடையூறாக அண்ணாமலை இருக்கிறார். தினமும் எதையாவது ஏட்டிக்குப் போட்டியாக சொல்லிக்கொண்டு பிரச்சனையை பெரிதாக்கிக்கொண்டே போகிறார் என்பதால்தான் நிலைமையை சாந்தப்படுத்த கொஞ்ச காலம் வெளிநாட்டுக்கு அண்ணாமலையை அனுப்பி வைத்திருக்கிறது பாஜக தலைமை.
அதுமாதிரியே அண்ணாமலை வெளிநாடு சென்றபின்னர் அதிமுக – பாஜக மோதல் எதுவும் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில்தான் மீண்டும் அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர நினைக்கிறது பாஜக. அப்படி வராவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு சில ரெய்டு பயத்தினை காட்டி இருக்கிறது.
ஓபிஎஸ், சசிகலா, தினகரனை கட்சிக்குள் சேர்க்க மனமில்லாமல் போனதால், கட்சியை வலுப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற நெருக்கடிக்குள் சிக்கி இருப்பதால் விசிக, பாமக, பாஜக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்குள் வர விரும்புகிறார் எடப்பாடி.
அதே நேரம், வர இருப்பது சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதிலும் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. இதைத்தான் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்திலும் கட்சியினரிடம் சொல்லி இருக்கிறார் எடப்பாடி.
விரும்பாமலே பாஜக கூட்டணிக்கு வந்தாலும் தவெக, நாதக, விசிக, பாமக கட்சிகளை கூட்டணிக்குள் சேர்த்து கூட்டணியை வலுவாக்கி வெற்றியை உறுதிப்படுத்த நினைக்கிறார் எடப்பாடி. இதனால்தான் திமுகவை தவிர இவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று மா.செக்கள் கூட்டத்தில் திடீர் கட்டளை போட்டிருக்கிறார் எடப்பாடி.