பாஜக – காங்கிரஸ் இடையேயான மோதல் வலுத்துக்கொண்டே போகிறது. கமலாலயத்தில் மாட்டுக்கறி சமைத்து வையுங்கள் அண்ணாமலை என்று பரபரப்பை கூட்டி இருக்கிறார் ஈவிகேஎஸ். இளங்கோவன். அண்ணாமலை – செல்வபெருந்தகை இடையேயான மோதலில் இளங்கோவன் இந்த பரபரப்பை கூட்டி இருக்கிறார். தொடரும் இந்த மோதலால் கமலாலயம் – சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் திகுதிகுவென்றிருக்கின்றன.
புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக ஒடிசா பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மோடியின் இந்த தமிழர் விரோதப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தார்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அன்ணாமலை, ’’எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று சொல்லி இருந்தார்.
உடனே செல்வப்பெருந்தகை, ‘’ஜனநாயகத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார். வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை’’ என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் இந்த விவகாரத்தில் அண்ணாமலையை கடுமையாக சாடி இருக்கிறார்.
’’கமலாலயத்தின் முன்பாக எப்போது போராட்டம் என்பதை மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார். அதற்குள் அண்ணாமலை சாப்பாடு தயார் செய்யும் போது மாட்டுக்கறியும் சமைத்து வையுங்கள். நாங்கள் அதை விரும்பி சாப்பிட தயாராக இருக்கிறோம். அதனால் கமலாலயத்தில் மாட்டுக்கறி சமைத்து வையுங்கள் என்று அண்ணாமலைக்கு பதிலடி தந்தவர்,
‘’நீங்கள் எங்களுக்கு ஒரு புத்தகம் தருவதாக சொல்லி இருக்கிறீர்கள். அதை தாருங்கள் வாங்கிக்கொள்கிறோம். பதிலுக்கு சொந்த குடும்பத்திற்கே மோடி செய்த துரோகம் என்கிற புத்தகத்தை தருகிறோம். அதை வாங்கி படித்து தெரிந்துகொள்ளுங்கள்’’ என்று சொல்லி இருக்கிறார்.