வெங்காயத்திற்குத் தோல் உரித்தாற் போல 50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு பிரச்சினையை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பெரும்பாலான பாஜக தலைவர்கள் கையில் எடுத்து தமிழ்நாடு தேர்தல் களத்தில் பெரும் பேசுப் பொருளாக மாற்றத் திட்டமிட்டு, திடீரென்று ஒரே நேரத்தில் ஆங்கில நாளிதழ்களில் அது தொடர்பான செய்திகளை பிரப்பினர்.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் முன்பு ‘கச்சத்தீவை மீட்போம்’ என கூறிய பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? என எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.
’10 ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை பாஜகவினர் அரங்கேற்றுகின்றனர்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார்.
திடீரென கச்சத்தீவு பிரச்சனையை கிளப்பி இருந்த பாஜக, அடுத்த சில நாட்கள் கழித்து வெளியிட்ட தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில், அது தொடர்பான ஒரு வாக்குறுதியும் தெரிவிக்கவில்லை.
முற்றிலும் தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே கச்சத்தீவு பிரச்சனையை பாஜக பேசுபொருளாக்கி இருந்தது அதன் தேர்தல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்த நிலையில், “பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த சூழலில், முதல் கட்டத் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் கச்சத்தீவு பிரச்சனையை எழுப்பி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது X தளக் கணக்கில் வெளியிட்ட RTI நகல் பற்றி தற்போது திடுக்கிடும் தகவல் வெளியியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி கச்சத்தீவு குறித்து விளக்கம் கேட்டு விண்ணப்பித்துப் பெற்ற RTI தகவலை அண்ணாமலை தனது X தளக் கணக்கில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மேற்கோள்காட்டி பதிவு செய்தனர்.
இந்நிலையில், அண்ணாமலை பதிவிட்ட அந்த RTI தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த ‘அண்டர் செகரட்டரி அஜய் ஜெயின்’ என்கிற பெயரில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் யாரும் பணியாற்றவே இல்லை என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் விஜிலன்ஸ் பிரிவில் ‘அண்டர் செகரட்டரி’ பதவிகள் குறித்து RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அஜய் ஜெய்ன் என்கிற பெயரில் யாரும் பணியாற்றவே இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
விஜிலன்ஸ் பிரிவில் அண்டர் செகரட்டரியாக அஜய் ஜெயின் என்பவர் பணிபுரியவே இல்லை என்றால், கச்சத்தீவு குறித்த அந்த RTI தகவலை அண்ணாமலைக்கு கொடுத்தது யார்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மோசடி நிகழ்ந்துள்ளதா? என்கிற பரபரப்புக் கேள்விகள் எழுந்துள்ளன.