அதிமுகவை நம்பி பாஜக இல்லை; பாஜகவை நம்பித்தான் அதிமுக இருக்கிறது என்கிற அளவில் தொடர்ந்து பேசி வெறுப்பேற்றி கூட்டணியை உடைத்ததால் அண்ணாமலை மீது பாஜக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.
தமிழக அரசியலில் அதிமுகவின் பலத்தை வைத்து பாஜகவை வளர்க்கச்சொன்னால் கூட்டணியை பாஜகதான் முடிவெடுக்கும், பாஜக சார்பில்தான் முதல்வர் வேட்பாளர் நிறுத்தப்படும் என்றெல்லாம் பேசி கூட்டணிக்கட்சிகளை சிதறடித்துவிட்டார் அண்ணாமலை என்கிற ஆத்திரத்தில் உள்ளது பாஜக சீனியர் டீம். அண்ணாமலை இங்கிருக்கும் வரை அடுத்தக்கட்ட நகர்வுகள் எதுவுமே இல்லாமல் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் பெரும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைமை வந்துவிடும் என்று அந்த டீம் எச்சரித்ததன் அடிப்படையில் சில மாதங்கள் வெளிநாடு சென்றுவிட தலைமை அறிவுறுத்தியபடியே படிப்பதாக லண்டன் சென்றுவிட்டார் அண்ணாமலை.
அவர் மூன்று பாத படிப்பு நவம்பர் இறுதியில் சென்னை திரும்பியதும் டிசம்பரில் அதிர்ச்சி காத்திருக்கிறது என்கிறது கமலாலய வட்டாரம்.
அண்ணாமலை லண்டன் செல்கிறார் என்றதுமே அவருக்கு பதிலாக புதிய தலைவர் அறிவிக்கப்பட இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், வெளிநாட்டில் இருந்தாலும் அண்ணாமலைதான் தலைவர் என்றும், தற்காலிகமாக கட்சியை நிர்வகிக்க எச்.ராஜா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினை அமைத்தது தலைமை. இந்த 6 பேரும் அண்ணாமலைக்கு எதிரானவர்கள் என்பதாலேயே பாஜக வட்டாரத்தில் ஒரு சலசலப்பு எழுந்தது.
அதே மாதிரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அடிக்கடி தமிழ்நாடு வந்து பல்வேறு ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு ஹெஸ்ட் ஹவுசில் முக்கிய நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோனை கூட்டத்திற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்களையோ, தமிழிசையின் ஆதரவாளர்களையோ அழைக்கவில்லை நிர்மலா சீதாராமன். வானதி சீனிவாசன், கறுப்பு முருகானந்தம், கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ் உள்ளிட்ட 7 நிர்வாகிகளுடன் மட்டுமே, அதாவது தனது ஆதரவாளர்களுடன் மட்டுமே ஆலோசனை நடத்தி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் அண்ணாமலையை நீக்கிவிட்டு, தனது ஆதரவாளரை தமிழக பாஜக தலைவராக்க காய் நகர்த்தி வருகிறார் நிர்மலா சீதாராமன் என்று கமலாலய வட்டாரத்தில் பேச்சு உள்ளது.