
கிட்டத்தட்ட தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து கழுத்தை பிடித்துத் தள்ளி அண்ணாமலை வெளியேற்றப்படுகிறார் என்றே தெரிகிறது. அதனால்தான் அவரும் முழுக்க முழுக்க நனைந்த பின் முக்காடு எதுக்கு? என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே தமிழக பாஜகவில் இருந்துதான் அடுத்து முதல்வர் வருவார் என்று அண்ணாமலை பேசிவந்ததை பழனிசாமி கொஞ்சம்கூட ரசிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா சிறைக்கு சென்றது வரைக்கும் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார் அண்ணாமலை.
இத்தனையும் செய்துவிட்டு கூட்டணி என்று போய் நின்றால் என்னவாகும்? அப்படித்தான் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது.

அண்ணாமலையை நீக்கினால் பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பழனிசாமி சொன்னதை அலட்சியப்படுத்தினார் அமித்ஷா. இதனால் மோடியும், அமித்ஷாவும் சென்னைக்கு வந்தபோதும் கூட சந்திக்க மறுத்துவிட்டார் பழனிசாமி.
பழனிசாமி இல்லாமலேயே வென்றிடலாம் என்று அண்ணாமலை சொன்ன கணக்கை அப்போது அமித்ஷாவும் நம்பியிருந்திருக்கிறார். இப்போதும் பழனிசாமி தேவையில்லை. ஓபிஎஸ், தினகரனை வைத்துக்கொண்டு மற்றவர்களை இணைத்து கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்றுதான் ஆலோசனை சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. ஆனால் அதற்கு முன்பாகவே ’இது எடுபடாது’ என்ற ரிப்போர்ட் போயிருக்கிறது டெல்லிக்கு.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தயார். ஆனால், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கக் கூடாது. அவர் இருக்கும் வரைக்கும் கூட்டணிக்குத் தயார் இல்லை என்று கறாராகவே சொல்லி இருக்கிறார் பழனிசாமி. 2024 இப்படித்தான் பழனிசாமி சொன்னதை அலட்சியப்படுத்தினோம். அவர் நம்மை அலட்சியப்படுத்திவிட்டார் என்பதை யோசித்துப்பார்த்த அமித்ஷா, உடனே அண்ணாமலையை அழைத்து புதிய தலைவரை அறிவிக்கப்போவதாக சொல்லி இருக்கிறார்.

’அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்துவிடுவேன்’ என்று சவால் விடுத்து வந்ததால், அந்த முடிவில் இருந்து பின் வாங்கமாட்டேன் என்று வேறு அடிக்கடி சொல்லி வந்ததால், அதிமுக -பாஜக கூட்டணி உறுதியாகிறது என்றதும் தலைவர் போச்சு என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அண்ணாமலை. ஆனாலும், பழனிசாமியை பொருட்படுத்தாமல் புதிய அணி அமைப்பார் அமித்ஷா என்றும் கொஞ்சம் நப்பாசை இருந்தது அண்ணாமலை. இப்போது அதிமுக – பாஜக கூட்டணி என்று உறுதியாக அவருக்கு தெரிந்துவிட்டது.
டெல்லியின் போக்கு தன்னை வெளியேற்றும் முடிவில் இருப்பதை புரிந்துகொண்டு, அவர்களாக அறிவிப்பதற்கு முன்பு தானாகவே சொல்லிவிட்டார் அண்ணாமலை.
முழுக்க முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு? என்ற முடிவுக்கு வந்து, ‘’புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லிக்கு போறாரு. அண்ணாமலை இவர கைகாட்டுறாரு. அண்ணாமலை இவருக்கு கை காட்டல. இந்த எந்த வம்பு சண்டைக்கும் நான் வரலைங்ணா’’என்று சொல்லி, தமிழக பாஜக தலைவர் மாற்றம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அப்படி இருந்து சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், ’’புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நிறைய பேசுவோம்’’ என்று சொல்லி இருக்கிறார்.
அதிமுக கொடுத்த நிர்பந்தத்தினால்தான் பதவி நீக்கமா? என்ற கேட்டால், ‘’அதப்பத்தி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பல..’’ என்று மனுசர் அலறுகிறார்.
’’என்னைய பொறுத்தவரைக்கும் இந்த கட்சி நல்லா இருக்கணும்’’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்கிறார்.
அண்ணாமலை வெளியேற்றப்படுகிறார் என்று ஆனதுமே அடுத்து யார்? என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
’தமிழக பாஜகவின் புதிய தலைவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நயினார் நாகேந்திரன், அடுத்த இடத்தில் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். அந்த பட்டியலில் எச்.ராஜாவும் , வானதி சீனிவாசனும் உள்ளார்கள்’ என்கிறது கமலாலயம்.
jmrkmx
c4wivl