பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான பிரபல ரவுடி திருவேங்கடம் நேற்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த என்கவுண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அது குறித்து அவர், ’’பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், சென்னை – மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி யளிக்கிறது.
காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை சிறைவாசி சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி?
இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை சிறைவாசியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரியது.
உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை சிறைவாசி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு திமுக நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
என்கவுண்டர் எனும் பெயரில், விசாரணை சிறைவாசிகளைக் கொலைசெய்வதை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீதான மக்களின் கோபத்தையும், ஆளும் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியையும் மட்டுப்படுத்த வேண்டுமானால் என்கவுண்டர்கள் உதவலாமே ஒழிய, அது ஒருநாளும் குற்றத்துக்கான முழுமையானத் தீர்வில்லை.
ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணை சிறைவாசி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனவும்,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’’என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், ’’பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் .ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’என்று தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
சீமான் மற்றும் அண்ணாமலையின் இந்த எதிர்ப்பு குறித்து விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, ’’ ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நேரடி சம்பந்தப்பட்டுள்ள கொலையாளி திருவேங்கடம் காவல்துறை மோதலில் கொல்லப்பட்டுள்ளான்.
காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து அதிமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாதக சீமானும், ஒரே மாதிரி ஒரே குரலில் கொலையாளிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
அதாவது, கொலையாளி திருவேங்கடம் நேரடியாக ஆம்ஸ்ட்ராங்கை வெட்டும் காட்சி வெளியாகியுள்ளது. அப்படி நேரடி தொடர்பில் உள்ள கொலையாளிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது, தலித் விரோதப்போக்காகும்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் சொல்லாமல், குற்றவாளிகளை பாதுகாக்கும் பணியில் ஒன்றிணைவதை தலித் இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக, அண்ணாமலையும் சீமானும் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்கிறார்.
அவர் மேலும், ‘’இந்த என்கவுன்ட்டரை கண்டித்து நாதக சீமானும், பாஜக அண்ணாமலையும், அதிமுக எடப்பாடி பழனிச்சாமியும் கண்டித்து அறிக்கை கொடுத்தாலும் அண்ணாமலையின் நோக்கமும் எடப்பாடியாரின் நோக்கமும் வேறு வேறு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கஸ்டடி எடுக்கப்பட்ட கொலையாளிகளில் திருவேங்கடம் ஏற்கனவே பல கொலை வழக்குகளில் தொடர்புடையவன். கூலிக்கும்பல் தலைவர்களில் இவனும் ஒருவன்.
கொலையாளிகளுக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருப்பதை விசாரிக்க வேண்டும் என்பது விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கையும் நிலைப்பாடும்.
இந்த பதற்றத்திலிருந்து தான் பாஜக அண்ணாமலை அறிக்கை கொடுத்துள்ளார். இதற்கு வழக்கம் போல ஒத்து ஊதுவது நாதக சீமான். ஆனால், நான் என்கவுன்ட்டரை ஆதரித்து விட்டதாக திசை திருப்புகிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பது, சாதிய – மதவாத கும்பல் ஒருபுறம், அரச பயங்கரவாதம் மறுபுறம் என இருமுனைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களத்தில் எதிர்த்து நின்று வளர்ந்து வரும் பேரியக்கம்.
அரசின் ஒடுக்குமுறை கருவிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். எங்களை விட யாரும் எந்த கட்சியும் பாதிப்புக்குள்ளானதில்லை. அவற்றை கருத்தியல் பலத்துடனும் சமரமின்றியும் துணிவுடன் எதிர்கொண்டு இன்றளவும் களத்தில் நிற்கிறோம். காவல்துறையும், ஆட்சி நிர்வாகமும் ஆட்சியாளர்களுக்கானவை என்ற புரிதல் எங்களுக்கு உண்டு. ஆனால், இன்று திடீர் தலித் ஆதரவு வேடம் போடுபவர்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டியதில்லை.
குடிப்பெருமை பேசியும், வட்டார சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அரசியலை முன்னெடுப்பவர்கள் தான் காவல் படுகொலைக்கு எதிராக பொங்குகின்றனர். மனித உரிமை பேசுகின்றனர். இன்றளவும் காவல் நிலைய மரணங்களுக்கும், ஊபா, தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கருப்பு சட்டங்களுக்கும் எதிராக ஒரு அரசியல் இயக்கமாக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே.
நேற்று நடைபெற்ற சம்பவத்திலும் சட்டப்படி நீதி விசாரணை நடக்கத்தான் போகிறது. ஆனால் இன்று கண்டனம் தெரிவிக்கும் சீமான், அண்ணாமலை போன்ற நபர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து தான் எனது கேள்வி. திமுக ஆட்சி மீதான வெறுப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர்கள் முந்தைய தொடர் செயல்பாடுகளை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள், சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக ஒரு துரும்பையும் அசைக்காமல், படுகொலையானவர்களை கொச்சைப் படுத்தி பேசியவர்கள், குடிபெருமை பேசுபவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பறித்து, இடப்பங்கீட்டு போராட்டத்தை புறக்கணிப்பவர்கள் என இவர்கள் தான் இன்று திடீர் தலித் ஆதரவு வேடம் போடுகிறார்கள்.
இவர்களின் நரித்தனத்தை தலித் இளைஞர்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். நம்முடைய ஆதங்கம் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தின் ஆதங்கமாகவே வெளிவருகிறது. கொலையாளிகள் மீதான கோபமும் அதே தான். ஆனால், சீமானுக்கும் அண்ணாமலைக்கும் இருக்கும் கோபம் கூலி கொலைக்கும்பல் மீதா? திமுக மீதா?’’ என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.